Friday, August 29, 2025

புதிய ஆரம்பங்கள்

 


அவள் கண்களில் இனம் புரியாத மருட்சி. எப்போதும் அவள் என்னையும் என் முகத்தையும் நேரில் பார்த்து பேசுவதே இல்லை.அது அவள் என்னிடம் வேலை செய்பவள் என்ற ஒரு காரணத்தினால் மட்டும் அல்ல என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் பெண்கள் நல்ல கட்டுமஸ்தான உடல்வாகுடன் திடகாத்திரமாக இருப்பார்கள் என்பது நான் படித்தப் பாடம். அப்படி எந்த விதமான திடகாத்திரமும் இவளிடம் இல்லை. நான் கேட்பதற்கு மட்டுமே பதில் சொல்லுவாள். அதுவும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் இருக்கும் அவளுடைய பதில்.

இந்த மாவட்டத்திற்கு பணி மாற்றம் கிடைத்தவுடன் இந்திய வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு எங்கே இருக்கிறது இந்த இடம் ? என்று தேடிப்பார்த்தேன். பஞ்சாபிலிருந்து பிரிந்து தனிமாநிலமாகிவிட்ட அரியானாவில் இருந்தது இந்த மாவட்டம்.மேவாட் மாவட்டம்.( Mewat district). எந்த விதமான தொழில் அபிவிருத்திகளும் இல்லை. விவசாயம் மட்டுந்தான். பெரும்பாலும் எல்லா ஆண்களும் வாகன ஓட்டுநர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது இரண்டு ஏக்கர் நிலமாவது இருந்தது. இரண்டு ஏக்கர் நிலத்திற்கும் குறைவாக இருப்பவனுக்கு யாரும் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க மாட்டார்களாம். அவள் தான் ஒரு நாள் இந்தச் செய்தியைப் பேச்சுவாக்கில் சொன்னாள். இரண்டு மாதங்கள் ஆனது அவள் சகஜமாக என்னுடன் இரண்டொரு வார்த்தைகள் பேசுவதற்கு.

அவளுடைய கதையை அவள் சொன்னாள். அவள் பெயர் ரத்னா. அவள் சொந்த ஊர் அசாமில் இருந்தது. அடிக்கடி லாரி ஓட்டிக்கொண்டு வரும் அவள் கணவன் நெடுஞ்சாலையில் இருக்கும் இவர்களுடைய தேநீர்க்கடையில்தான் லாரியை நிறுத்துவான். நேநீருடன் சேர்ந்து சுடச்சுட சப்பாத்தியும் கிடைக்கும். அவனை முதன் முதலாக அவள் பார்த்தபோது அவளுக்கு பத்துவயது கூட ஆகவில்லை. அவன் எப்போதும் அதிகாலையில் அல்லது இரவில்தான் வருவான். வந்தால் லாரியை நிறுத்திவிட்டு அவர்கள் தேநீர்க்கடையில் வெளியில் போட்டிருக்கும் கட்டிலில் படுத்துக்கொள்வான். ரத்னாவின் அம்மா அவனை விழுந்து விழுந்து கவனிப்பாள். எல்லாம் சுடச்சுட அவனுக்கு கிடைக்கும். எப்போது வந்தாலும் அவன் அவளுடைய அம்மாவுக்கு ஏதாவது வாங்கி வருவது வழக்கமாக இருந்தது. அவன் வந்துவிட்டால் இவளுக்கும் ஏக குஷியாக இருக்கும். ஏதாவது திண்பதற்கு கிடைக்கும் என்பதால். இரவில் மட்டும் அவளுக்குப் பயமாக இருக்கும். அவளைத் தனியாக தூங்க வைத்துவிட்டு கதவை வெளிப்பக்கமாக தாளிட்டு விட்டு அவளுடைய அம்மா போயிருப்பாள். தம்பி, தங்கைகள் எல்லோரும் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு படுத்திருப்பார்கள். ஒருநாள் அப்படித்தான் இரண்டு வயது கூட நிரம்பாத அவளுடைய தம்பி நடுராத்திரியில் விழித்து அழுதுகொண்டிருந்தான். அம்மாவைத் தேடி. அவள்தான் மூத்தப் பெண். அவளுக்கு தூக்கம் வரவில்லை. அவனை எவ்வளவோ சமாதானப்படுத்திப் பார்த்தாள். அவள் சமாதானப் படுத்துவதைக் கண்டு கோபத்தில் அவனுடைய சத்தம் இன்னும் அதிகமானது. அவள் எழுந்துபோய்க் கதவைத் தட்டினாள். அந்தச் சாலையில் அவர்கள் வீடு மட்டும்தான். மற்ற குடியிருப்புகள் எல்லாம் மலையடிவாரத்தில் இருந்தன. அவள் தம்பியின் சத்தமும் அவள் கதவை இடித்தச் சத்தமும் சேர்ந்து காற்றைக் கிழித்துக் கொண்டு கதவின் இடுக்குகள் வழியாக பேரிரைச்சலுடன் அந்த நடுஇரவை அலற வைத்தது.

கதவு திறக்கவே இல்லை. அழுது அழுது அந்தச் சத்தத்தில் தொண்டைக் கட்டிக்கொண்டது அந்தச் சின்னப் பையனுக்கு. அவள் மடியில் அவன் பெருவிரலைச் சூப்பிக்கொண்டு படுத்திருந்தான். அவள் விரித்திருந்த கிழிந்தப் போர்வை நனைந்தது. அவள் அவனுடைய ட்டிராயரைக் கழட்டி விட்டு அவனைச் சற்றுத்தள்ளிப் படுக்க வைத்தாள். அவளுடைய பைஜாமாவும் நனைந்து போனது. அதிகாலையில் எப்படியோ தூக்கம் வந்து தொலைத்தது, அவளுடைய அம்மா வந்து இவள் தலைமயிரைப் பிடித்து இழுக்கும்வரைத் தூக்கம் கலையவில்லை.

..நல்லா திங்கறியே.. சொரணை இல்லை உனக்கு..இந்த வயதில் இப்படி படுக்கையை நனைச்சிருக்கியே நாயே’ என்று கத்தினாள். அம்மாவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. ‘படுக்கையை நான் ஈரமாக்கவில்லை.. பெரிசா கத்த வந்திட்டியே..கதவை வெளிப்பக்கமா பூட்டிட்டு நீ எங்கே போய் தொலைஞ்சே’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. அம்மா வெறிப்பிடிச்சவள் போல் தம்பி தங்கைகள் எல்லோரையும் அடித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் இப்போது என்ன சொன்னாலும் பிரயோசனமில்லை.

வெளியில் வந்தவுடன் கடைக்கு வேண்டிய பாத்திரங்களை எடுத்து வேகமாக கழுவி வைத்தாள். தண்ணீர்ப் பிடித்து நிரப்பினாள். அதுவரை அந்த லாரிக்காரன் வெளியில் கிடந்தக் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் அம்மாவின் துப்பட்டா காற்றில் அசைந்து கொண்டிருந்தது. அந்த துப்பட்டாவைப் பார்க்க பார்க்க அவளுக்கு லாரிக்காரன் மீது கோபம் வந்தது. அப்பா கொடுத்த சாய்க் கப்பை எடுத்துக்கொண்டு அவனிடன் போனாள். அவன் கண்விழித்திருந்தான். இவள் கைகளில் இருந்து சாய்க் கப்பை வாங்கியவன் இவள் கன்னத்தில் தட்டினான். பட்டென்று அவன் கைகளைத் தட்டி விட்டாள். தூரத்திலிருந்த அம்மா அவர்கள் இருவரையும் பார்த்தாள். இப்போது அம்மாவின் பார்வையை எதிர்த்து நின்று அவள் பார்த்தபோது அம்மா அவள் பார்வையைத் தாங்காமல் வீட்டுக்குள் போய்விட்டாள். இப்படித்தான் இந்த லாரிக்காரனின் உறவு இவர்கள் குடும்பத்துடன் ஆரம்பித்தது.

அடுத்து 6 மாதம் கழித்து வந்தவன் ரூபாய் 2700 கொடுத்துவிட்டு இவளை அவனுடன் அழைத்துவந்துவிட்டான். தம்பி தங்கைகளை விட்டுவிட்டு அவளுடைய அப்பாவை விட்டுவிட்டு அந்த மலையடிவாரத்து காற்றை விட்டுவிட்டு அவனுடன் தனியாகக் கிளம்பிவர முடியாது என்று அவள் அழுதப்போது அவளுடைய அம்மாவும் சேர்ந்து அழுதுக்கொண்டிருந்தாள். லாரிக்காரன் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறான், அவனுக்கு சொந்தமாக நிலமிருக்கிறது, சாப்பாட்டுக்கு இந்த மலையடிவாரத்தில் லாரிக்காரனிடமும் காட்டு இலாக்கா காரர்களிடமும் மாறி மாறி படுக்க வேண்டிய அவஸ்தை இருக்காது என்று அவளுடைய அம்மா சொன்னபோது அவளால் மறுத்துப் பேச முடியவில்லை.

அம்மா சொன்னபடியே அவனுக்கு 3 ஏக்கர் நிலமிருந்தது. வீட்டில் எல்லோரும் அந்த நிலத்தில்தான் உழைத்தார்கள். அவனுடன் பிறந்தவர்கள் மூன்றுபேர். இவன் தான் மூத்தவன். அவனுடைய அப்பா வயது 60 தாண்டிவிட்டது. இருந்தாலும் நல்ல வாட்டச்சாட்டமாக இருந்தார். இவளுக்கு சாப்பாட்டுக்கு எந்தக் குறையுமில்லை.

வயிறு நிறைய மூன்று நேரமும் சாப்பிடும்போதெல்லாம் வீட்டு ஞாபகம் வரும். வீட்டு நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் குறைத்துக்கொண்டாள்.

வீட்டை நினைத்தவுடன் அம்மாவின் நினைவு வரும் அம்மாவை நினைத்தால் இப்போது தன் கணவனாக இருக்கும் இவன் பக்கத்தில் அம்மாவின் துப்பட்டா காற்றில் அசைவது தெரியும். சில சமயங்களில் அவனுடைய வார்த்தைகள் அவளை அப்படியே பொசுக்கும். உச்சக்கட்ட ஆலிங்கனத்தில் அவள் தன்னை மறக்கும்போது ‘உன்னோட அம்மாவும் இப்படித்தான்’ என்று உதிரும் அவன் உளறல்கள்.. ..ஒரு மலைப்பாம்பு தன்னை இறுக்கிப்பிடித்து மூச்சு மூட்ட வைப்பது போலிருக்கும். பலம் கொண்ட மட்டும் அவனைப் பிடித்து கீழே தள்ளிவிட்டு எழுந்திருக்க முயலும் ஒவ்வொரு முறையும் அவன் பிடி இறுகும்.கண்களை மூடி கால்களை விரித்து சருகளாய் அவள் இலை அவனுடைய வெட்ப மூச்சில் தீப்பிடித்து எரியும். அவள் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருந்தாள்.

ஒருநாள் அவனுடைய தம்பி அவனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அவர்களின் அப்பா வந்து சமாதானப்படுத்தினார். தம்பிகள் மூவரும் அப்பா சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது

அவள் காதிலும் விழத்தான் செய்தது. இந்த ஊரில் வீட்டுக்கு வீடு இந்தக் கதைதான் என்பது அவளுக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் ஏதாவது மாற்றம் நம் வீட்டிலாவது நடக்காதா என்ற நப்பாசை இருக்கத்தான் செய்தது.

‘நீ இதற்கு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இருக்கிற 3 ஏக்கர் நிலத்தை நாங்கள் நாலுபேர் பங்கிட்டுக்கொண்டால் என்ன தேறும்? 3 ஏக்கர் நிலத்திற்கு குறைவா இருந்தா எந்தப் பெண் எங்களைத் திருமணம் செய்து கொள்வாள்? ..யோசிச்சுப் பார். எங்கள் அண்ணன் தம்பிக்கே இதிலே ஒண்ணும் சங்கடமில்லைன்னா உனக்கென்ன வந்தது.. நானா இருந்தா என்னா என் தம்பிமாரா இருந்தா என்ன சொல்லு. திரெளபதி இருக்கலையா ஐந்து பேருக்கூட..’ அவன் சொல்லிக்கொண்டே இருந்தான். அவள் அழுதுக்கொண்டிருந்தாள். மறுநாள் அவன் லாரியை எடுத்துக்கொண்டு லோடு ஏற்றிக்கொண்டு பீகார் போய்விட்டான். அவள் வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் அன்றிரவை எண்ணிப் பயந்து கொண்டிருந்தாள். அவனுடைய தம்பி இருட்டில் அவளை நெருங்கி அணைத்தப்போது உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதொன்றும் அவளுக்கு நினைவில் இல்லை. அவள் அருகில் அந்த ஊர்ப் பெண்களின் கூட்டம்.

‘என்ன ரத்னா பயந்திட்டியா.. மூத்தவனை விட சின்னவந்தான் ரொம்ப நல்லவன்.அதிர்ந்து பேச மாட்டான். இந்தப் பாரு ,, நீ கத்தி மயக்கப்போட்டு விழுந்ததிலிருந்து ஒண்ணும் சாப்பிடாமா உன் பக்கத்திலெயே உட்காந்திருக்கான். மேவாட்டுக்கு வந்துட்டு இதுக்கு மாட்டேன்னா எப்படி வாழமுடியும் சொல்லு..’ பக்கத்து வீட்டு அஞ்சு சொல்லிக்கொண்டிருந்தாள். அவர்கள் வீட்டில் அவள் கணவனுடன் பிறந்தவர்கள் 5 பேர். அவள் கணவன்தான் இவளைத் திருமணம் செய்து கொண்டு பீகார் மாநிலத்திலிருந்து அழைத்து வந்தான். அண்ணன், தம்பிகள் எல்லோருக்கும் சேர்த்து எட்டு பிள்ளைகளைப் பெற்றிருந்தாள்.

மெதுமெதுவாக சின்னவனின் அமைதியும் அன்பானக் கவனிப்பும் அவளைச் சமாதானப்படுத்தியது. லாரிக்காரனிடமிருந்த முரட்டுத்தனம் இவனிடமில்லை. எல்லா வற்றையும் விட இவளுக்கு மனநிம்மதி கொடுத்தது.. இவன் எந்த நேரத்திலும்..

‘உன்னோட அம்மாவும் இப்படித்தான்’ என்று சொல்வதில்லை. சின்னவனின் குழந்தை அவள் வயிற்றில் வளர்ந்தது. வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷமாகவே இருந்தது. லாரிக்காரன் வெளிப்படையாக சந்தோஷப்படுவது போல காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அவன் குமைந்து கொண்டிருப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அதைப் பார்க்க பார்க்க அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. மலைப்பாம்பைப் பிடித்து அதன் தலையில் ஏறி நாட்டியம் ஆடுவது போல சந்தோஷம். அவன் வீட்டுப்பக்கம் வருவதையே தவிர்ப்பதும் அவளுக்குப் புரிந்தது. அவள் அதற்காகவெல்லாம் கவலைப் பட்டுக்கொள்ளவில்லை. அவன் வீட்டிலிருக்கும்போது வேண்டும் என்றே சின்னவனை அழைத்து அவனருகில் உட்கார்ந்து கொண்டாள். அந்தக் குழந்தைப் பிறந்தப்பின் அடுத்தவன் முறை வந்தது.

அவள் எதிர்பார்த்தது தான் என்றாலும் வரும்போது அந்த வலியை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பக்கத்தில் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது.

இவனிடம் லாரிக்காரனின் முரட்டுத்தனமில்லை. சின்னவனின் மென்மையுமில்லை. ஓர் அவசரம்.. அவசரம் .. அவசரம்.. பத்துநாள் பட்டினிக் கிடந்தவன் கஞ்சியை ஒரே வாயில் ஊற்றி மேலும் கீழுமாகக் கொட்டிக்கொண்டு நிற்கும் அவசரம் இவனிடம்.

இவள் முகத்தை அவன் நேர்க்கொண்டு பார்ப்பதே இல்லை. இவளும் அவன் முகத்தைப் பார்ப்பதில்லை. நான்காவது முறை வந்தப்போது இவள் உடல் கிழிந்து கிடந்தது. தைக்க முடியாதக் கிழிசலாய் எந்த உடம்பையும் போத்திக்கொள்ள லாயக்கு இல்லாமல் தொங்கியது. ஆத்திரத்தில் அவன் இவள் கிழிசல்களைப் பிடித்து இழுத்து சிதைத்தான். ‘அந்த இருட்டில் அவள் கதறல்…. அவளுடைய தலைமுடிக் கலைந்து முன்னால் விழுந்து ஆடியது. அவள் கண்களில் வெறித்தனம்…டேய்.. நான் உன் அம்மாடா.. உங்க அப்பனை எங்கே கூப்பிடு.. உன் அண்ணன்மாரைக் கூப்பிடு.. அவள் உடல்வேகமாக முன்னும் பின்னும் ஆடியது. எங்கிருந்து அவள் குரலுக்கு இத்தனை கொடூர சத்தம் வந்தது என்பது தெரியவில்லை. மறுநாள் பூசாரி வந்து மந்திரித்தார். அவள் அமைதியாக கட்டிலில் படுத்திருந்தாள். பக்கத்தில் அவளுடைய மாமனார் விசிறியால் அவளுக்கு காற்று வீசிக்கொண்டிருந்தார்.

நல்ல வாட்டச்சாட்டமான 60 வயதுக்கிழம். அந்த வீட்டிலேயே அதிகமாக உடல் உழைப்பு செய்பவர்.அந்தக் கிழத்தின் பார்வையைச் சந்திக்க விருப்பமில்லாமல் அவள் கண்களை மூடிக்கொண்டாள். லாரிக்காரன் வந்து அவள் உடலைத் தொட்டுப்பார்த்தான். குளிர்ந்திருந்தது அவள் உடல். அவன் கவலையுடன் அங்கிருந்து நகர்ந்தான். சின்னவனும் அடுத்தவனும் வந்து எட்டிப்பார்த்தார்கள். அவள் பக்கத்தில் அவர்களுடைய அப்பா இருப்பதைக் கண்டவுடன் பக்கத்தில் வராமல் வெளியில் போய்விட்டார்கள். கிழம் அவள் பக்கத்திலேயே இருந்தது. அவளை விட்டு அங்கிருந்து நகர்வது மாதிரியே தெரியவில்லை. அவளுக்கு வந்திருப்பது கிழவனின் மனைவியின் ஆவி அல்லவா. மறுநாள் அவளைப் போலீஸ் கைது செய்தது.

‘மாமனாரை இரவில் அரிவாளில் வெட்டிக்கொலை செய்த மனநிலை சரியில்லாத மருமகள்’ என்று பத்திரிகைகள் மேவாட் மாவட்டத்தில் நடந்தக்கொலையைப் பற்றி எழுதின. முதல் முறையாக அந்த ஊருக்கு போலீஸ் வந்தது. பத்திரிகைகாரர்கள் வந்தார்கள். ‘அண்ணன் தம்பிகளுடன் வாழ்க்கை நடத்தும் நவயுக திரெளபதிகள்..

மாமனாரின் ஆசைக்கும் மறுப்பு சொல்லாமல் எரியும் குடும்பவிளக்குகள்..

ஊடகங்களுக்கு பெருந்தீனியாகப்போனது மேவாட் மாவட்டத்தின் கதைகள்.’

அன்று என்னைப் பார்க்க வந்திருந்த சேவா சங்கத்தின் காரியதரிசியுடன் பேசிக்கொண்டிருந்தேன். ரத்னாவின் கதை என்னை மிகவும் பாதித்தது.

‘என்ன மேடம்.. எத்தனை வருடமா இந்தக் கதை நடக்கிறது இங்கே’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். “போலீஸ், சட்டம், நீதி இதெல்லாம் இருந்துமா..?’

அந்தக் காரியதரிசி பெண் என்னைப் பார்த்து சிரித்தாள். எழுத்துமூலமாகவோ, சொல் மூலமாகவோ ஒரு புகாரும் இதுவரைக் கிடையாது. நானும் எவ்வளவோ முயற்சி செய்துவிட்டேன் மேடம். இந்த ரத்னா கூட மனநிலைச் சரியில்லாமல் கொலை செய்ததாகத்தான் ஒத்துக்கொண்டிருக்கிறாளே தவிர உண்மைக் காரணம் எதையும் சொல்வதில்லை. சரி.. நாளை இவர்கள் ஊரில் நடக்க இருக்கும் எங்கள் திரெளபதி நாடகம் பார்க்க வாருங்கள் என்றழைத்தாள். ஊருக்கு ஏற்ற நாடகம்தான் என்று எண்ணிக் கொண்டே வருவதாக சம்மதம் தெரிவித்தேன்.

அந்த நாடகத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஊரின் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் நாற்காலிகள். மற்ற ஆண்களும் பெண்களும் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். குழந்தைகளில் ஒன்றிரண்டு பெண் குழந்ததைகள் மட்டும்தான் இருந்தார்கள். அந்த தலைகீழ் விகிதத்தைப் பார்க்கும்போது அந்த ஊரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனைச் செய்து கொள்ளவே பயமாக இருந்தது.

‘ திரெளபதியின் துகிலை உரியும்போது அங்கே கூட்டத்தில் மயான அமைதி..

பக்கத்தில் இருந்த மரத்தின் கிளையிலிருந்து சேலைகளை ஒருவர் முடிச்சுப் போட்டுக்கட்டி துச்சாதனன் இழுக்க இழுக்க அனுப்பிக்கொண்டிருந்தார். அதைப் பார்க்க சிரிப்பாக இருந்தது. ஆனால் அங்கிருந்த மக்கள் யாரும் மரக்கிளையிலிருந்து வந்து கொண்டிருக்கும் சேலைகளைப் பார்க்காமல். .’க்ருஷ்ணா..க்ருஷ்ணா’ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். அடுத்தக் கட்டம்.. திரெளபதி சபதம் செய்துகொண்டிருந்தாள். ஆண்தான் பெண் வேடமிட்டிருந்தார். சபதம் செய்யும்போது திரெளபதியின் குரலில் ஆணின் சத்தம் தொனித்தது. அதுவரைப் பெண்குரலில் பேசிக்கொண்டிருந்தவர் வீரவசனம் பேசும்போது தன்னை மறந்து ஆண்குரலில் வீரத்துடன் அங்குமிங்கும் நடந்து கொண்டு சபதம் செய்யும் காட்சி எனக்கு வேடிக்கையாக

இருந்தது. பெண்களின் கூட்டத்திலிருந்து கேவி கேவி அவர்கள் அழும் குரல்கள் வந்தன. அந்தக் காட்சிக்கு அழாத ஒரே பெண் நான் மட்டும்தான் என்பது அதன் பின் நினைவுக்கு வந்தது.

மறுநாள் அந்தக் காரியதரிசி வந்திருந்தாள். நான் அவர்களின் நாடகத்தைப் பார்த்ததில் அவளுக்கு ரொம்பவே சந்தோஷம்.

நாடகம் எப்படி இருந்தது மேடம்’

அவள் கேள்விக்கு நான் நேரடி பதில் சொல்லாமல் ‘எத்தனை வருஷங்கள் இந்த நாடகம் நடத்துகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

’35 வருஷமா மேடம்’

‘ம்ம்ம் இந்த நாடகத்திலே இந்த ஊரு திரெளபதிகளுக்கு என்ன மெசஜ் கொடுக்கறீங்க?’ ‘என்ன மேடம் இப்படி கேட்டுட்டீங்க.. திரெளபதி வந்த ஒவ்வொரு காட்சியிலும் இந்த ஊரு பெண்கள் எப்படி அழுதார்கள்னு நீங்க நேரிலேயே பாத்தீங்களே..’

‘அப்போ 35 வருஷமா இந்த திரெளபதிகளை அழ வச்சதுதான் உங்க நாடகத்தின் வெற்றின்னு சொல்ல வர்றிங்களா’

‘ அழ வச்சது மூலமா இந்த நாடகம் அவுங்களுக்கு ரொம்ப பெரிய உதவியைச் செய்திருக்கு மேடம்’

‘வாட் டூ யு மீன்’

‘யெஸ் மேடம். அழறப்போ மனசிலிருக்கும் பாரம் குறையுமில்லியா’

எனக்கு அவளுடைய பதிலைக் கேட்டு சிரிப்பு வந்தது.

‘அழறது மனப்பாரத்தைக் குறைக்கும்தான். ஒத்துக்கறேன். ஆனா அதுவே பிரச்சனைக்குத் தீர்வாகி விட முடியுமா’

‘எங்களால் என்ன செய்ய முடியும் சொல்லுங்க மேடம்..’

‘அட என்ன இப்படி சொல்லிட்டீங்க.. நீங்கள் எல்லாம் நினைச்சா நிறைய விஷயங்களை இந்த மக்களுக்குச் சொல்ல முடியும்.. இதே திரெளபதி கதையை பழைய பாண்டவர் சபதத்திலிருந்து மாத்துங்க. பாண்டவர்களே துகிலுரியும் இந்த திரெளபதிகளுக்கு பாண்டவர்களின் சபதம் சரிப்படுமா யோசியுங்க. புதுசா .. முடியும் உங்களால்.. இவுங்களுக்கு ஏத்த மாதிரி.. பாஞ்சாலி சபதத்தை மாத்துங்க..’

அந்தப் பெண் அமைதியாக நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன் பின் நானும் வேலையில் பிஸியாக இருந்துவிட்டேன்.

அடுத்து ஆறுமாதங்கள் கழித்து பக்கத்து ஊரில் ‘நவயுகத் திரெளபதி’ நாடகம் போட்டார்கள். சேவாசங்கத்திலிருந்து நான் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்புக்கு மேல் அழைப்பு. நல்ல குளிர். சால்வையை இழுத்துப்போர்த்திக் கொண்டு நானே காரை ஓட்டிக்கொண்டு போனேன். வழக்கம்போல பெண்களின் கூட்டம். வழக்கம் போல காட்சிகள். கடைசிக் காட்சி திரெளபதி சபதம்…

‘எங்கே அந்த வில் விஜயன்..? என்னைத் தன் மனைவியென வென்றெடுத்து வந்தவன் வென்று வந்தப் பரிசு பெண் என்று சொல்லாமல் பொருள் என்று சொன்னானே!

ரத்தமும் சதையும் துடிப்பும் கொண்ட பெண் என்ன ஜடப்பொருளா? பொருள் என்பதால் அல்லவா அண்ணன் -தம்பிகள் அனைவருக்கும் உரியதென அன்னை குந்தி அறியாமல் சொல்லிவிட்டாள். அறியாமல் சொல்லியதையே அறமாக்கி அண்ணன் தம்பிகள் பெண்டாள அனுமதித்த அந்தப் பாவி அர்ச்சுணன் எங்கே .. கொண்டு வாருங்கள் அவனை..காட்ட வேண்டும் அவனிடம் பெண்ணின் வீரம் என்ன என்பதை.’

‘அண்ணன், தம்பிகள். பெரியப்பா, ஆசான் எல்லா உறவுகளையும் தருமத்தின் முன்னால் வென்றெடுக்க போர்க்களத்தில் கீதை உபதேசித்த கண்ணன் எங்கே? கொண்டுவாருங்கள் அவனை. எங்கே போனது அவன் கீதையின் உபதேசம்..

என்னை ஐவருடன் படுக்க ஆணையிட்ட போது எங்கே போனது கண்ணனின் உபதேசம்..? கீதையை உபதேசித்த அவன் நாக்கைப் பிடித்து இழுத்து அறுக்கும்வரை என் குரல் அடங்காது.. கொண்டு வாருங்கள் அவனை…’

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். பெண்கள் கூட்டத்தில் அமைதி.. அவர்கள் கண்ணீரைத்துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அங்கே கல்லெறி,, நாடகத்தில் தொங்கிய தீரைச்சிலைகளில் தீ பற்றிக்கொண்டது. கலவரம் வெடித்தது.

மறுநாள் அங்கே 144 தடை யுத்தரவு அமுலுக்கு வந்தது.

சிலர் நாடகத்திற்கு ஆதாரவாகவும் பலர் எதிர்ப்பாகவும் மாறியதால் ஏற்பட்ட கலவரம்.

நாடகத்தைப் புதிதாகப் போடச்சொன்னது நான் தான் என்ற செய்தியை பெருமையுடம் அந்த சேவா சங்கத்தின் காரியதரிசி சொல்லப் போக அதுவே எனக்கு வினையாக வந்த வாய்த்தது.

மறுநாள் என் மேலதிகாரியிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

‘ உங்களுக்கு என்று புதிதாக ஒரு மாவட்டத்தைத்தான் இனிமேல் உருவாக்கணும்.

வாட் இஸ் திஸ் .. எங்கே போனாலும் ஒரு கலவரம்..அதில் கட்டாயம் நீங்க சம்மந்தப்பட்டிருக்கிறிர்கள்! பஞ்சமி நில மீட்புனு போவீங்க.. இருளர்களின் போராட்டம்னு கூட்டத்திற்கு தலைமைத்தாங்க போவீங்க.

ஆதிவாசிகளின் நில உரிமைப் போராட்டம்னு ஒரு சங்கத்தை ஆரம்பிச்சு விட்டுட்டு வந்திருவீங்க..! உங்களை எங்கே போஸ்டிங் பண்ணினாலும் அங்கே புதுசா நீங்க என்ன தலைவலியை எங்களுக்கு கொண்டு வரப்போறிங்களோனு பயமா இருக்கு..நீங்க அரசாங்க வேலை செய்யப் போறிங்களா இல்ல பொதுநலச்சேவை செய்யப் போறீங்களா..?’

‘இரண்டையும் நான் ஒண்ணாத்தான் சார் நினைக்கேன்’

அவர் தலையப் பிடித்துகொண்டு நாற்காலியில் உட்கார்ந்தார்.

‘சாரி .. உங்களுக்குனு எந்த டிபார்ட்மெண்டையும் கொடுக்கற மாதிரி இல்லே.

எந்த மாவட்டத்திலும் போஸ்டிங் இல்லை.. டிபார்ட்மெண்ட் இல்லாத மாவட்டம் இல்லாத எந்த வேலையும் செய்யாத அரசாங்க அதிகாரியாக இருங்க..’

” நன்றி சார்..’ என்று நான் சொன்னவுடன் அவர் என்னை நிமிர்ந்துப் பார்த்தார்.

இப்போது நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் சிரித்தோம். அவருக்கும் தெரியும் அவரால் முடியாதப் பல காரியங்களை நான் ஆரம்பித்து வைத்துவிட்டேன் என்பது. அதில் அவருக்கும் பெருமைதான். ஆனால் அவருடைய நாற்காலி அதை ஏற்றுக்கொள்ள இடம் கொடுக்கவில்லை.

நாற்காலிக்கு அருகில் அவரும் நாற்காலியை விட்டு ரொம்ப விலகி நானும் நின்று கொண்டிருந்தோம்.

பிகு:

கதைக்கரு: இன்றும் வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் மன்சாம் மால்வா பகுதிகளில், அரியானா மாநிலத்தில் மேவாட் மாவட்டத்தில் இந்த நவயுக திரெளபதிகளின் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளரான ஞானபீட விருதுபெற்ற பேராசிரியர் குர்தியல் சிங் (Gurdial Singh) தன்னுடைய புதினங்களில் நாடகங்களில் பெண்ணுக்கு இழைக்கப்படும் இக்கொடுமைகளைப் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். அண்மையில் உத்திரபிரதேசத்தில் நடந்த இம்ரானாவின் செய்திக்குப் பிறகு இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்த அவலங்கள் நடப்பது தெரியவந்துள்ளது. திரெளபதி நாடகத்தைப் பார்த்து அந்தப் பெண்கள் கண்ணீர் விடும் செய்தியை ஓர் ஆய்வறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த உண்மைச் செய்திகளே இக்கதையின் கரு. நன்றி. –


Sunday, August 24, 2025

குடும்பம் பெண் × பொய்களும் அபத்தங்களும்




தமிழ் எழுத்துலகில்  பெண்ணியம் குறித்த கருத்துகளை மேற்கத்திய  பெண்ணியத்துடன் ஒப்பிட்டும் தமிழின் பொற்கால சங்க இலக்கியத்துடன் அதன் போக்குகளை  நுணுகி ஆராய்ந்தும் தொடர்ந்து எழுதி வந்தவர்களில் ராஜ்கெளதமன் முக்கியமானவர். இந்த ஆய்வுகளின் மூலம்

தமிழரின் பெண்ணியப் பெருவெளியை அடையாளம் காட்டுகிறார். 

குடும்பம், தனிச்சொத்து , அரசு – தோற்றம் என்ற கருத்துருவாக்கத்தை முன்வைத்த ஏங்கெல்ஸின் குடும்பம் குறித்தும் அது பெண்ணிய தளத்தில் பொய்யாகப் போனதையும் பண்பாட்டு ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தியவர் ராஜ்கெளதமன் அவர்கள்.

சங்க காலம் :

சங்க இலக்கியம் இருவேறு பெண்களைக் காட்டுகிறது. மலை, காடு, கடல், வயல் பகுதிகளில் உழைத்தவர்கள் குறமகள், கொடிச்சி, பரதவப்பெண், நுழைச்சி, உமணப்பெண், உழத்தியர், கடைசியர், ஆய்மகள், எயினப்பெண், மறப்பெண், புலைத்தி, பருத்திப்பெண், கட்டுவிச்சி, அகவன் மகள், விறலி, பாடினி, மூதில்மகள், வெறியாடும் மகள் என்றெல்லாம் சுட்டப்படம் இப் பெண்கள் உழைக்கும் பெண்கள். பேராசிரியர்களும் சங்க காலத்தைப் பொற்காலமென நிறுவ முயலும் ஆய்வாளர்களும்.சங்க காலத்தில் பெண் சுதந்திரமாக இருந்தாள் என்றும் ஆண் பெண் உறவில் பெண்ணுக்கு சுதந்திரமும் உரிமையும் இருந்தது என்பதற்கும் இன்றும் சங்க காலத்தின் இப்பெண்களை மட்டுமே எடுத்துக்காட்டுவார்கள் . ஆனால் இப்பெண்களுடன் வாழ்ந்த மேட்டுக்குடி பெண்கள் சங்க காலத்தில் ஏற்படுத்திய சமூக மாற்றங்களையும் அவர்களின் வாழ்க்கை  குடும்பம் சமூக தளத்தில் இன்றுவரை பண்பாட்டு மேனிலை ஆக்கமாக உருமாறி இருப்பதையும் தன் ஆய்வுகளின் வழி வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர் ராஜ்கெளதமன் அவர்கள்.

குடும்பம் ,ஒருதார மணமுறை , ஆணாதிக்க தந்தை வழிப் பண்பாட்டில் வந்தவர்கள்தான் என்ற வகையில் இந்தப் பெண்களுக்கு ஒற்றுமை உண்டே தவிர இவர்களின் வாழ்க்கை வேறாக இருந்தது அந்த வேறுபாடு பொருளாதர ரீதியால் வரையறுக்கப்பட்டிருந்தது என்றாலும் அந்த வரையறையின் கோடுகள்தான் பண்பாட்டு தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. 

        இனவிருத்தி இருவருக்கும் பொது. ஆண் தலைமை குடும்பம் பொது என்றாலும் உழைக்கும் பெண்களுக்கு உற்பத்தியில் பங்கு இருந்தது.  வீட்டிற்குள் அடைந்து கிடக்காமல், உழைப்பின் பொருட்டு வீட்டை விட்டு வெளியில் வந்து செல்லும் சுதந்திரம் இருந்தது. ஆனால் மேட்டுக்குடி பெண்கள் சுகபோகத்தில் வாழ்ந்தாலும் பசி வறுமை அறியாதவர்கள் என்றாலும் அவர்களின் வாழ்க்கை அதிகார மையத்தின்   கைகளில் இருந்தது. எனவே நிச்சயமற்றதாக இருந்தது. கட்டுப்பாடு , காவல் மிகுந்ததாக இருந்தது. தலைவனுக்கு அவளைத் தவிர வேறு ‘உரிமை மகளிரும் ‘ அவனுடைய பாலியல் விருப்பத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவள் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாக வேண்டும். இப்பெண்களின் உலகம் முழுக்கவும் ஆண் சார்பு நிலையில் இருந்ததைக் கவனப்படுத்துகிறார் ராஜ் கெளதமன். பண்பாட்டு ரீதியாக பெண் சுதந்திரத்தை அனுபவித்த உழைக்கும் பெண்கள் கீழ் நிலைப்படுத்தப்பட்டு உழைக்காத இந்த மேட்டுக்குடி பெண்களின் சடங்குகளும் நம்பிக்கைகளும் புனிதங்களும் பண்பாட்டு ரீதியாக ஒட்டுமொத்த பெண்களுக்குமானதாக கட்டமைக்கப்பட்டதையும் விளக்குகிறார். சங்க கால புலவர்களின் பாடல்களில் வெளிப்படும் வருணனை முதல் வாழ்க்கைச் சடங்குகள் வரை அனைத்திலும்

இது எவ்வாறு வெளிப்பட்டிருக்கிறது என்பதை மிகத் துல்லியமாக முன்வைக்கிறார்.

            மேட்டுக்குடிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று நோன்பு , விரதம் இருந்தார்கள். தை நீராடித் தவமிருந்தார்கள். பிள்ளைகள் பெற வேண்டி சாமியைக் கும்பிட்டார்கள். உழைக்கும் பெண்களிடம் இதைக் காணமுடியவில்லை. தெருவில் உப்பு விற்ற உமணப்பெண், மீன்விற்ற பரதவப்பெண், பரணில் கிளி விரட்டிய குறவர்மகள், பால் தயிர் விற்ற இடையர் பெண் ..இவர்கள் எல்லாம் தனக்கான ‘நல்ல’ கணவன் வேண்டுமென எந்தக் கடவுளிடமும் வேண்டுதல் செய்யவில்லை.

விரதமிருக்கவில்லை. தனக்கான ஆணைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமையையும் அது மறுக்கப்படும்போது அவனோடு உடன்போக்கு செல்லும் துணிச்சலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்கள் இனக்குழு சார்ந்தும் தங்களின் தொழில் சார்ந்துமே அடையாளப்படுத்தப் படுகிறார்கள். ஆனால், மேட்டுக்குடி பெண்கள் ,

‘மனைக்கு விளக்கு’ , ‘மனையோள்’ , ‘மனை மடந்தை ‘ , இல்லாள், இல்லாட்டி என்று வீடு குடும்பம் சார்ந்தே பெண்ணின் அடையாளத்தை ஏற்படுத்தினார்கள். ஆண் குழந்தையைப் பெற்று வம்சவிருத்திக்கு உதவுவதே பெண்ணின் சிறப்பாக போற்றப்பட்டது. தந்தையாலும் தமையனாலும் கொண்ட கொழுநனாலும் மட்டுமல்ல அவள் ஈன்ற ஆண்மகவாலும் அப்பெண் அடையாளப்படுத்தப் படுகிறாள். பெண்ணுக்கு என்று தனி அடையாளமாக உழைக்கும் பெண்களிடம் இருந்தவை அனைத்தும் பண்பாட்டு ரீதியின் மேனிலை ஆக்கத்தில் காணாமல் போனது. 

     பெண்ணின் அறியாமையை  பேதை, மடமகள், மடவரல், மடந்தை என்று சொல்லி அதையே அப்பெண்ணின் அழகியல் பண்பாக புலவர்கள் போற்றினார்கள். ஆண் இதற்கு மாறாக சான்றோன், பேரறிவாளன், புலவன் என்று அறிவுடன் தொடர்புடையவனாக போற்றப்பட்டான். 

     பெண் தான் விரும்பும் ஆணுக்கு முன் நாணி தலைகுனிவது இயல்பான மெய்ப்பாடு. இந்த மெய்ப்பாடு ஆணுக்கும் உண்டு என்கிறார் ராஜ்கெளதமன்!

மேலும் இந்த மெய்ப்பாடுகள் இச்சமூகத்தால் உருவாக்கப்பட்டு அவள் மீது திணிக்கப்பட்டவை. “இப்படிக் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் சூழலில் வெளிப்படும் மெய்ப்பாடுகளே, பெண்ணின் முழுநேர , முழுவாழ்க்கைக்குரிய உயர்ந்தப் பண்புகளாக போற்றி உரைக்கப்பட்டன. பெண்ணுக்கு உயிர் ஆண் என்ற ஆணாதிக்கச் சித்தாந்தம் கொடிகட்டிப் பறந்தது. பெண் உடலால் உணர்ச்சியால் அளக்கப்பட்டாள், ஆண் அவனது சமூகச் செயலால், அறிவால் அளக்கப்பட்டான். பெண் செயலற்றவள், அடக்கமானவள், ஆண் செயலூக்கமானவன். பெண்ணுக்கு உலகம் அவள் வீடு . அவள் உடல். டிஆணின் உலகம் அறிவு, சமுதாயம்.” ( தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு பக் 145)  இக்கருத்துகளை நிலை நாட்டியதில் சங்க இலக்கியத்திற்கு பெரும்பங்குண்டு. பண்பாட்டு ரீதியாக இதை நோக்கியே தமிழ்ச் சமூகம் நகர்ந்திருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.  

மார்க்சியப் பெண் 

           நிறப்பிரிகை 1991ல் (7/7/91)   நடத்திய பெண்ணியம் கூட்டுவிவாதம் பற்றிய ஒரு எதிர்வினையாக ராஜ்கெளதமன் இந்தியப் பண்பாட்டு தளத்தில்  மார்க்சியப் பெண்ணும் மேற்கத்திய பெண்ணும் எங்கே நிற்கிறார்கள் ? ஏன் ? என்ற ஒரு சிந்தனைப் புள்ளியைத் தொடுகிறார்.

          ஏங்கெல்ஸ் எழுதிய ‘குடும்பம், தனிச்சொத்து , அரசு – தோற்றம்’ நூலில் தனிச்சொத்துடமை உருவாக்கம் எவ்வாறு குடும்பம் அமைப்பு தோன்ற காரணமாக இருந்தது என்பதை விளக்குகிறார். இதை எடுத்துக்கொண்ட ராஜ்கெளதமன், “ தனிச்சொத்துடமை முறை நீங்குகிற போது , குடும்பமும் நீங்கும் என்பது இதன் தர்க்க நீட்சி” என்பார். (தலித்திய விமர்சனக் கட்டுரைகள் பக் 49)  பெண் முதலாளியச் சமூக உற்பத்தி முறையில் நுழைகிறபோது அவளுடைய விடுதலை சாத்தியமாகும் என்ற எங்கெல்ஸ்சின் கருத்தும் பொய்த்துவிட்டது என்பதுதான் ராஜ்கெளதமன் முன்வைக்கும் கருத்து. சோசலிஸ்டுகளின் சிந்தனாப் போக்கிலும் தந்தைவழி சமூக மதிப்பீடுகளே இருக்கின்றன என்பதை வரலாற்று  ரீதியான தரவுகளுடன் முன்வைக்கிறார் ராஜ்கெளதமன். 

          பூர்ஷ்வா , நிலவுடமை சமூக அமைப்பிலும் சோசலிச சமூக அமைப்பிலும் ஆணுக்கு இணையாகவும் , ஏன் அதிகமாகவும் சம்பாதிக்கும் இன்றைய பெண்களுக்கும் விடுதலை கிடைத்துவிட்டதா? பொருளாதர சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு அவளுக்கான முழு விடுதலையை சாத்தியப்படுத்தி இருக்கிறதா ? என்று இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு பார்க்கும்போதுதான் ராஜ்கெளதமன் அதை தன் சமூகப் பார்வையாக முன்வைத்திருக்கும் பெண்வெளி விரியும். 

சமகாலம்

      “இந்திய நடுத்தர வர்க்கத்தின் மற்றொரு பண்பைப் பார்க்க வேண்டும். இன்று பெண்கள் படிப்பது, பணம் சம்பாதிப்பது, ஆணுடன் சமமாக கைகோர்த்து நடப்பது எல்லாமே, ‘விடுதலை’ போல தெரிந்தாலும் , இவை பெரிதும் ஆணாகப் பார்த்து , அவன் செளகரியம்- கெளரவம் ஆகியவற்றுக்காகப் பெண்ணுக்கு வழங்கிய சலுகைகள்தாம். இது ஆணாகப் பார்த்துப் பெண்ணுக்கு வழங்கிய ‘சுதந்திரம்’ ஆதிக்க சாதிகள், அடிநிலைச் சாதிகளுக்குத் தருகிற சில ‘சலுகைகள்’ போல இவை” என்று சமகால சமூக யதார்த்தத்தை முன்வைக்கிறார். ராஜ்கெளதமன். (தலித்திய விமர்சனக் கட்டுரைகள் பக் 55) நாம் நம் அனுபவங்களின் ஊடாக இக்கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் “பெண்கள் படிக்கவும் சம்பாதிக்கவும் தரப்பட்டிருக்கும் சலுகைகளும் அவளுக்கான திருமணச் சந்தையில் அவள் மதிப்பீடுகளுக்கானவைகளாக மாறிவிட்டன ‘ எனலாம். 

      பெண் விளிம்பு நிலையில் நிற்கிறாள், அனைத்து ஆதிக்கச் சக்திகளும் அவளை அடக்குவதில் போட்டிப்போடுகின்றன. பொருளாதர ரீதியில் வர்க்க்கமாகவோ , சாதி மத ரீதியில் தீண்டத்தாகாதோர் பட்டியலிலோ உழைப்பு ரீதியாக பாட்டாளி என்றோ அவளை தனித்து வகைப்படுத்திவிட முடியவில்லை. இவை எல்லாமும்தான் அவள் என்றாலும் அவளை அப்படி எவரும் அடையாளப்படுத்துவதில்லை. இந்தப் பொது அடையாளத்திலும் பெண்ணை விட ஆண் மட்டுமே தெரிகிறான். பெண் இதிலும் அவனுடன் வாழும் அவன் மனைவியாகவோ தாயாகவோ மகளாகவோ மட்டுமே இருந்து அவளுக்கான இந்த அடையாளங்களையும் இழந்திருப்பது வெளிப்படை.

      பெண்ணைப் பற்றி எழுத வந்த சங்ககாலப் புலவர்கள் அவளுடைய உடலைப் பற்றியே பாடினார்கள். அவளின் அங்கங்கள், அவற்றுக்குரிய பாலியல் பெறுமதிகளையும் அது ஆணின் பாலியல் நுகர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் மட்டுமே எழுதினார்கள். இன்றைய நவீன கவிதைகளிலும் இதுவே தொடர்கிறது. இன்றைய நுகர்ப்பொருள் கலாச்சாரத்தில் சோப்பு விற்பனைக்கு அருவியில் குளித்து ஈரத்துடன் காட்சி தரும் பெண்ணுடல் தேவைப்படுகிறது. கார் விற்பனைக்கும் கருவி விற்பனைக்கும் .. சந்தையில்  விற்கப்படும் அனைத்தையும் விற்பதற்கு விளம்பரப்பலகையாக பெண்ணுடல் மாறி இருப்பது அன்றைய பெண்ணுடல் வருணனையின் தொடர்ச்சிதான்.

     குடும்பம் என்ற ஆண்மைய அமைப்பு பெண்ணை அவள் பாலியல் அடையாளத்துடன் மட்டுமே வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. அதை ஓர்மையுடன் காப்பாற்றி வருகிறது. அதைப் பண்பாட்டு ரீதியாக காப்பதில் மொழியும் சங்க காலம் முதற்கொண்டு எழுதப்பட்டிருக்கும் இலக்கியங்களும் 

மதங்களும் நம்பிக்கைகளும் அடித்தளமிட்டிருக்கின்றன. காலப்போக்கில் தோன்றிய சிந்தனைப் பள்ளிகளும் பெண் , குடும்பம் என்ற புள்ளியில் போதாமைகளுடன் இருப்பதும் தெளிவாகிறது.  இக்கட்டமைப்புகளுக்கு எதிராக பெண்கள் திரளும்போதும் குரல் கொடுக்கும்போதும் 

“பெமினிஸ்டுகள் போக்கிரிகள், பொறுப்பற்றவர்கள், பெமினிசனம் இவர்களுக்கு ஒரு பொழுதுப்போக்கு, இவர்கள் நளினமற்றவர்கள், குடும்ப நிம்மதியைக் குலைக்க வந்தக் கோடாரிகள், விடுதலை என்ற போர்வையில் யாரோடும் படுக்க விரும்பும் இசை கேடான வாழ்க்கை நடத்துபவர்கள், “ என்ற குற்றச்சாட்டுகள் எளிதாக பெண்களாலேயே பெண்கள் மீது சுமத்தப்படுகின்றன. குடும்பம் பெண்ணின் தேவை கருதி உருவாக்கப்பட்ட சமூக அமைப்பு என்பது கூட பாதி உண்மையாக இருக்கலாம். ஆனால் யாருடைய தேவை கருதி யார் உருவாக்கிய அமைப்பு என்பது தான்  நம் கேள்வி. 

     குடும்பம் என்ற அமைப்பின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் பொய் அபத்தங்கள் அனைத்தும் பெண்களை அடிமைப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. இக்கட்டமைப்பு தீடிரென யாரோ ஒரு தனி நபரால் உருவாக்கப்பட்டதல்ல.. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வரலாற்று ரீதியான மாற்றங்களுக்கு வளைந்து கொடுத்து பண்பாட்டு ரீதியாக பெண்ணின் புனிதங்களாக அவள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.  

     இன்றைய இந்திய மகளிர் அமைப்புகள் பொருளாதர நலன்களுக்காக போராடுகின்றன. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கின்றன. பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடக்கும்போது பேரணி நடத்தி தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்கின்றன.  இதெல்லாம் பெண் விடுதலையைப் பெற்றுத் தருமா? என்பதை ராஜ்கெளதமன் முன்வைக்கும் பண்பாட்டு ரீதியாக அணுக வேண்டி இருக்கிறது.

 **********

ஆக.25, 2025 

பேரா. ராஜ் கெளதமன்

75 வந்து பிறந்தநாள்.

வரலாற்றை மீள் வாசிப்பு செய்து

வழிகாட்டிய ராஜ் கெளதமன் அவர்களுக்கு 🌹💐💥💥💥🙏🙏🙏

    துணை நின்ற நூல்கள்:

>தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு – ராஜ்கெளதமன்.

 கெளரி பதிப்பகம் , புதுச்சேரி. 1994.

தலித்திய விமர்சனக் கட்டுரைகள் – ராஜ்கெளதமன்.

காலச்சுவடு . 2003.

Saturday, August 23, 2025

பாலியல் சுரண்டல்கள். வைரமுத்து vs சின்மயி

 வைரமுத்து சின்மயி &

கோணங்கி 




  

   “எழுதுகிறவன் தான் எழுதியவற்றைக் காட்டிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும் “ மக்சிம் கார்க்கி. 

கலை இலக்கிய உலகத்தின் உன்னதப் பீடங்கள் சரிகின்றன.

அவன் மனிதனாக மனிதாபிமானமுள்ளவனாக இருக்கிறானா என்பது

முதன்மையாகி அவன் தகுதிகள் என்று நினைக்கப்படும் அனைத்தும்

தகுதி இழக்கின்றன. படிப்பு, பட்டம், அறிவுத்திறன், கலை இலக்கிய ஆற்றல்

இத்தியாதி போற்றுதலுக்குரிய தகுதிகள் சரியும் காட்சி கலாச்சார

பண்பாட்டு அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது.

சமூகத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்களின் நியாயங்களைப் புறந்தள்ளிவிட்டு வாழப்பழகியவர்களுக்கு இன்றையப் பெண்களின் 

குரல் பெரும்வெடிப்பாகி அச்சுறுத்துகிறது. ஆண்மைய அதிகார வர்க்கம் இதை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறது.

  “ஒரு குழந்தையுடன் படுப்பது ஓர் உன்னத அனுபவம், ஞானஸ்நானம் போன்ற ஒரு  நிகழ்வு, ஒரு புனிதமான அனுபவம் “ என்று எழுதியவர்

பிரான்சு நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் மட்ஷனப்.

(GABRIEL MATZNEFF) குழந்தைகளுடன் அவர் கொண்ட பாலியல் வேட்கையை

 (pedophilia)    பாலியல் பயண அனுபவங்களை அவர்  தன் கதை கட்டுரைகளில் டைரி குறிப்புகளில் எழுதி வந்ததை பிரஞ்சு இலக்கிய உலகம்


குற்றமாக கருதவில்லை. அவருக்கு விருதுகளும் அரசு உதவித்தொகையும்

கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டார்.  ஆனால் 14 வயதில் அவரால்

பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வனேஷா ஸ்பிரிங்கோரா

( Vanessa Springora) தன் அனுபவத்தை எழுதியபோது அதுவரை இலக்கியத்தின்  புனைவு என்ற போர்வையில் பொதிந்திருந்த வக்கிரங்கள் வெட்ட வெளிச்சமாகின.

  கேபிரியலின் கதையை காப்பி அடித்து நம் ஊர் எழுத்தாளர்

தமிழில் எழுதியக் கதை எவ்விதமான சலசலப்புகளும் இன்றி,

 பின்நவீனத்துவ மோஸ்தரில் கொண்டாடப்பட்டது. 

காட்சி ஊடகம், சினிமாப் பாடல்கள் , காட்சிகளின் உடல்மொழி,  இரட்டை அர்த்தம் தொனிக்கும்  வசனங்கள், விளம்பரங்கள் இத்துடன்

உன்னத இலட்சியங்களை விதைக்கும் கலை இலக்கியப் பண்பாட்டு அரசியலும் ‘பாலியல் சுரண்டலை’ அவமானமாக கருதுவதில்லை. சமூகத்தின் தலைகுனிவாக கருதாமல் கள்ள மவுனத்தில் கடந்து செல்வதுடன் , தங்கள் பாலியல் வறட்சியைத் தீர்க்கும் வழியாகவும் கொண்டிருக்கின்றன. 

பெண் மீதான பாலுறவு கவர்ச்சியே பின்நவீனத்துவ கோட்பாட்டில் உலகமயமாக்கப்பட்டுள்ளது.  செக்ஸ் க்ளப்புகள், காபரேக்கள், மசாஜ் நிலையங்கள் எல்லாம் ஆண் பெண் கூட்டாகவும் தனித்தனியாகவும்

அவரவர் ரசனைக்கேற்ப பாலுறவு பண்டங்களை வாங்கிக்கொள்ளும்

சந்தைகளை உருவாக்கி இருக்கின்றன.  இந்த ஆணாதிக்க சுரண்டல் அமைப்பில் ஜனநாயகம் என்பது சுரண்டுவதற்கான வழிகளை விரிவுப்படுத்தி ‘சுரண்டலை’ ஜனநாயகப்படுத்தி இருக்கிறது.. முதலாளித்துவ முறைமையின்

புதிய ஜனநாயக விரிவாக்கங்கள்  பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் அனைத்துவகையான பிரதிகளையும் உருவாக்கி சந்தைப் படுத்திக்கொண்டே பெண்ணுரிமைப் பேசுகிறது. புரட்சி முகமூடிகளை அணிந்து கொண்டு பேரணி நடத்துகிறது.

   

        சரி நிகர் 123ல் ‘கோணேஸ்வரிகள்’ என்ற தலைப்பில் கலா

என்பவர் எழுதிய கவிதை ஆணாதிக்கம் இனவாதத்துடன் இணையும்

போது ஒரு பெண் சந்திக்கும் இனவாத ஆணாதிக்க அடக்குமுறையைத் தெளிவாக முன்வைத்திருக்கிறது.

நேற்றைய அவளுடைய சாவு - எனக்கு

வேதனையைத் தரவில்லை.

மரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள்

அதிர்ந்து போதல் எப்படி நிகழும்.

அன்பான என் தமிழிச்சிகளே,

இத்தீவின் சமாதானத்திற்காய்

நீங்கள் என்ன செய்தீர்கள் ! ?

ஆகவே: வாருங்கள்

உடைகளைக் கழற்றி

உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்

என் அம்மாவே உன்னையும் தான்.

சமாதானத்திற்காய் போரிடும்

புத்தரின் வழிவந்தவர்களுக்காய்

உங்கள் யோனிகளைத் திறவுங்கள்.

பாவம்

அவர்களின் வக்கிரங்களை

எங்கு கொட்டுதல் இயலும்.

வீரர்களே ! வாருங்கள்.

உங்கள் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.

என் பின்னால்

என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.

தீர்ந்ததா எல்லாம்.

அவளோடு நின்றுவிடாதீர் !

எங்கள் யோனிகளின் ஊடே

நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.

ஆகவே :

வெடிவைத்தே சிதறடியுங்கள்.

ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளி

புதையுங்கள்

இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி.

சிங்கள சகோதரிகளே!

உங்கள் யோனிகளுக்கு

இப்போது வேலையில்லை”

இனவாதம், சாதிவாதம், மதவாதம் அனைத்தும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தும் பாலியல் வன்கொடுமைகள், வல்லாங்குகள் பொதுசமூகத்தின் கூட்டு மனநிலையாக இருக்கின்றன.

தனிமனிதனாக பெண்ணிய வன்கொடுமைகளுக்கு எதிராக குரல்கொடுக்கும்

மனிதன், சமூகத்தின் அங்கமாக இருக்கும்போது வேறொருவனாகிவிடுகிறான், அதாவது அவன் தனித்திருக்கும்போது அவன் பிரக்ஞை வெளிப்படுத்தும் நியாயங்கள் சமூகத்திரளின் துளியாக இருக்கும்போது காணாமல் போய்விடுகின்றன. சமூகத்தின் அரசு, அதிகாரவெளி தீர்மானிக்கும் விதிகளுடன்  ஒத்துப்போகிறான்.அல்லது எதிர்க்க முடியாமல் அமைதியாக

இருப்பதன் மூலம் அக்குற்றத்திற்கு அவனும் உடந்தையாகிவிடுகிறான். சமூகத்தின் அதிகாரவெளியோ தன் கொண்டாட்டத்திற்கும் தன்னை மகிழ்விப்பதற்கும்   கலை இலக்கிய பண்பாட்டு அரசியலைப் பயன்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக ஆடல் பாடல் கலைகளை அதிகார வர்க்கம் வளர்த்தெடுத்த பின்னணியிலிருந்து இதை அணுக வேண்டும். 

எதிரியைத் தோற்கடிக்க எதிரியின் மனைவியை வன்புணர்வு செய்யலாம் என்று நம் கடவுள்களைக் கொண்டு கற்பிக்கிறது. (உதாரணம் மகாபாசுவத புராணம்) மதப்பூசல்களுக்கு பெண்ணுடல்கள் பலியாகின்றன. நிறுவனமயம்

ஆக்கப்பட்ட மதம் தன் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பெண்ணுடலை ‘ புனிதம்’ ‘ஒழுக்கம்; என்ற கருத்தாடல்களின் ஊடாக

இழிவுப்படுத்துகிறது.  இப்பண்பாட்டு அரசியலை சடங்கு சம்பிரதாயங்கள் மரபுகள் மூலம் நிலை நிறுத்தியிருக்கிறது. எந்த மதமும் இதற்கு விதிவிலக்கல்ல.

நிலவுடமை சமூகத்தில் கலைஞன் கவிஞன்

ஆகியோருக்கு பொதுசமூகம் உருவாக்கி வைத்திருக்கும் தனிமனித  ஒழுக்கங்களை மீறுகின்ற  லைசன்ஸ் இருந்தது. காரணம் அவன் அதிகாரவர்க்கத்தை மகிழ்விப்பவன். அதிகார வர்க்கத்தின்

எல்லை மீறிய கொண்டாட்டங்களுக்குத் தீனிப்போட்டவன். அதிகாரவர்க்கத்துடன் அதனால் நெருக்கமானவனும் கூட. . 

நிலவுடமை சமூகத்தின் இதே நிலை முதலாளித்துவ சமூகத்தில்

முழுக்கவும் அதன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. விலைப்பட்டியல்கள்

தீர்மானிக்கப்பட்டன.

முடியாட்சியின் அதிகாரவெளியைக் கட்டுடைத்த மக்களாட்சியின் பண்பாட்டு அரசியல்,  ஆடல் பாடலை பொதுஜன வெளிக்கு கொண்டுவந்துவிட்டதில்

மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றாலும் ஆடலும் பாடலும் அதை

 நிகழ்த்துகின்ற உடல்மொழியும் ஆண்மைய அதிகார வேட்கையின் பசித் தீர்க்கும் நுகர் கலாச்சாரப் பண்டம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.  இன்றைய கணினி யுகத்தில் அவை புதியப்புதிய வடிவம் பெற்றிருக்கின்றன. உலகமயமாதல் சந்தையில் பாலியல் ஆதிக்கமும் பாலியல் சுரண்டலும் பல்வேறு உத்திகளுடன் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.  ஒரு பக்கம் பெண்ணியம், பெண் உரிமை, பாலின சமத்துவம் பேசிக்கொண்டே பெண்ணுடலை நுகர்பொருள் பண்டமாக்கி சந்தையில் கடைப்பரப்பி விற்கிறது  இன்றைய முதலாளித்துவ டிஜிட்டல் ஜன நாயக உலகம்.. இந்தப் புதிய ஜன நாயகத்தின் பல்லிடுக்குகளில் சிக்குண்டு சிதைந்து தன் இருத்தலுக்காக வாலசைக்கிறது கலை இலக்கிய உலகம்.

     ஆண் பெண் உறவு நிலையில் குடும்பம் என்ற  நிறுவனத்தின் கட்டமைக்கப்பட்ட ஒழுக்கவிதிகளை யாருமே மீறுவதில்லை என்று

என்று சொல்லிக்கொள்வது பெருமையாக இருந்தாலும், இன்று அந்தப்

பொய்யானப் பெருமிதங்களின் தேவை ஆண் பெண் இருபாலருக்கும் இல்லை. சமூகம் ஆண் பெண் உறவு நிலையில் ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 

தனிப்பட்ட ஆண் பெண் இருபாலாரின் ஒப்புதலுடன் நடக்கும் பாலியல் விதி மீறல்களை நம் சமூகம் ஏற்றுக்கொள்கிறது. நம் இந்திய சட்டம் கூட திருமணம் ஆன கணவன் மனைவி உறவில் திருமணத்திற்கு அப்பால் இருக்கும் எதிர்ப்பாலின உறவை கிரிமினல் குற்றமாக கருதவில்லை. காரணம் சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரின் ஒப்புதலுடன் நடக்கிறது என்று விளக்கம் தருகிறது. ஆனால் இக்காரணம் மணமுறிவுக்கு வலுவான காரணம் என்பதை இந்தியச் சட்டம் ஏற்றுக்கொள்கிறது.

         கவிஞர் கண்ணதாசனுக்கு பல பெண்களுடன் பாலியல்

தொடர்பு இருந்தது என்பது சமூகப் பிரச்சனையாக்கப்படவில்லை. கண்ணதாசனை எவரும் குற்றமிழைத்தவராக நினைக்கவில்லை.

திராவிட அரசியலை முன்வைத்த அறிஞர் அண்ணா, நடிகை பானுமதி

குறித்து சொன்னது பாலியல் சுரண்டலாகவில்லை. . காரணம் கண்ணதாசனும் அண்ணாவும் பிரபலமானவர்கள் என்ற சமூக அடையாளத்தைப் பயன்படுத்திக்கொண்டு பெண்களை அவர்களின் விருப்பமின்றி அணுகவில்லை. பாலியல் விதிமீறல்கள் இருந்தன. ஆனால் பாலியல் சுரண்டலில்லை. 

எனவேதான் பாலியல் மீறல்கள் என்பதும் பாலியல் சுரண்டல்கள் என்பதும் வேறானவை. பாலியல் மீறல்களில் தனிமனித உணர்வுகள் மட்டுமே காரணமாகின்றன. ஆனால் பாலியல் சுரண்டல் என்பதில் அதிகார வர்க்கத்தின் கை ஓங்கி நிற்கிறது. அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு  நடக்கும் பாலியல் செயல்களையே  பாலியல் சுரண்டல்கள் எனலாம். இன்றைய பெண்கள் அதிகார வர்க்கத்தின் பாலியல் சுரண்டல்களை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்..

      ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து #metoo இயக்கம் அமெரிக்காவில் 2017ல் மிகப்பெரிதாக எழுச்சிப் பெற்றது. 

     #metoo ஹேஷ்டேக் ஓரியக்கமாக மாறி ஆண்மைய சமூகத்தின் உன்னத பீடங்களை கேள்விக்குட்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும்  இரு பாலியல் பிரச்சனைகள்  மிக அதிகமாக விவாதிக்கப்பட்டன. 

1., பத்மசேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபலன் X பள்ளிமாணவிகள் 

2 பாடலாசிரியர் வைரமுத்து X பாடகி சின்மயி

இரண்டும் பாலியல் குற்றச்சாட்டுகள் என்றாலும் இரண்டையும் ஒரே பின்னணியில் அணுகிவிடமுடியாது.

பள்ளி ஆசிரியர் என்பது  குரு ஸ்தானம். “மாதா பிதா குரு தெய்வம்..” என்ற வரிசையில் தெய்வத்திற்கும் முன்னராக வைக்கப்பட்டிருப்பவர் குரு.

சமூக அறமதிப்பீடுகளின் மிக முக்கியமான ஓர் அடையாளம் ஆசிரியர். 

ஓரு ஆசிரியரை நம்ப முடியவில்லை என்றால் வேறு யாரைத்தான் நம்புவது?  என்ற அச்சம் பொதுவெளியில் கவலைக்குரியதானது.

பாதிக்கப்பட்ட மாணவியர் பாலியல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள். மேலும் நம் குடும்ப அமைப்பு பெற்றோர்களிடம்

பிள்ளைகள் இதைப் பற்றி எல்லாம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு

உரையாடல் வெளியையும் புரிதலையும் முழுமையாக கொண்டிருக்கவில்லை. இப்பிரச்சனை ராஜகோபால் என்ற தனிமனிதரின்

பாலியல் வக்கிரமா அல்லது இப்பிரச்சனை பள்ளி நிர்வாகத்துடன்

தொடர்புடையதா?/ குற்றம் செய்தவரை நிர்வாகம் பாதுகாக்கிறதா?

இப்பிரச்சனையை பல்வேறு கோணங்களில்  அணுக வேண்டி இருக்கிறது.


      இரண்டாவது பாடலாசிரியர் வைரமுத்து , பாடகி சின்மயி விவகாரத்தில் பேசப்பட்ட கருத்துகள் . சினிமா உலகின் உள்ளும் புறமும் அறிந்தவர்தான் சின்மயி. இதில் பாடலாசிரியர் அதிகாரமிக்கவர். சினிமாவிலும் சினிமாவைத் தாண்டிய அரசியலிலும் தன் அதிகாரத்தை நிலை நிறுத்தி இருப்பவர். அவரைக் குற்றம் சுமத்தினால் தனக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்ற எண்ணத்தால் சின்மயி உடனே பொங்கி எழவில்லை. இதையும் பெரிய குற்றமாக்க வேண்டியதில்லை. இதுவும் இருத்தலுக்கான போராட்டத்தில் பெண் அனுபவிக்கும் பாலியல் சுரண்டல்.

இதைப் பற்றிய முக்கியமான கருத்துரைகள் நாம் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது.


1) பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் 

“இரண்டு எதிர்வுகளும் பொதுப்புத்தியின் நகர்வுகளும்: என்ற தலைப்பில்

சில கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.

“ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக வாதாடும் நபர்கள் பாடகி சின்மயிக்காகவும் வாதாட வேண்டும்; ராஜகோபாலனைக் கண்டிப்பது போலவே வைரமுத்துவையும் கண்டிக்க வேண்டும்; தண்டிக்கும்படி கோரவேண்டும். இதுதான் நேர்மையான/ மனசாட்சியுள்ளவர்களின் வாதம் “

என்பதை முன்வைக்கும் பேரா. அ.ராமசாமி அவர்கள் 

 இப்பிரச்சனையை இன்னொரு கோணத்தை நோக்கி நகர்த்தி இருப்பது கவனிக்கத்தக்கது.  

“வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட சின்மயி எப்போதும் பிராமணிய அதிகாரத்தோடு தன்னை முன்வைக்கிறார். அதனால் அவரது குற்றச்சாட்டு சந்தேகத்துக்குரியதாக மாறுகிறது. சந்தேகத்துக்குரிய ஒன்றில், தமிழகப் பொதுப்புத்தி பிராமணீய எதிர்ப்பையே மேற்கொள்ளும். இதற்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன “ என்கிறார்  பேரா. அ. ராமசாமி.

     பாலியல் சுரண்டலை காலமெல்லாம் அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட தலித் பெண்களுக்காக பேசுவதை எப்போதும் சாதிப்பிரச்சனையாகவே அணுகும் சமூகம்தான் நம் சமூகமும் .  சின்மயி போன்ற மேல்தட்டு வர்க்கத்து பெண்கள் ஒடுக்கப்பட்ட பெண்களின் பாலியல் சுரண்டலுக்காக என்றுமே குரல்  கொடுத்தவர்கள் இல்லை. பெண்களுக்கும் சாதியும் வர்க்கமும் உண்டு. அதனாலேயே சின்மயி பிரச்சனையைக் கண்டு கொள்ளாமல் செல்லவேண்டும் என்பது அபத்தம்!

       பாலியல் சுரண்டல் ஆண் பெண் உறவு நிலையில் மட்டும் நடக்கும் பாலியல் அத்துமீறல் அல்ல.  சமபாலின உறவுகளிலும் பாலியல் சுரண்டல் இருப்பதை எழுத்தாளர் கோணங்கி மற்றும் எழுத்தாளர் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் பாலியல் விவகாரங்கள் வெளிப்படுத்தின. ஆண் பெண் உறவில் பாலியல் சுரண்டலுக்கு செவிமடுக்கும் பொதுஜனவெளி சமபாலின பாலியல் சுரண்டலைக் குறித்து அதிகம் பேசுவதில்லை.

         “கோணங்கியின் பாலியல் அத்துமீறலை பற்றி பல திசைகளில் இருந்தும் குற்றச்சாட்டு வந்ததும் , கோணங்கிக்கு மயிலிறகால் தடவுவது போல சிலர் கண்டனங்கள் தெரிவித்தனர். அதுவும் எப்படி? கோணங்கி நாமாவளி பாடிவிட்டு , கோணங்கி போற்றி, கோணங்கி சரணம் எல்லாம் மொழ நீட்டுக்கு பாடிவிட்டு …”அண்ணன் கோணங்கிக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் “ எப்படி இருக்கிறது கதை? “ என் கிறார் அராத்து. 

      பாலியல் அத்துமீறலை கலை இலக்கிய உலகித்தினருக்கு விதிவிலக்காகவும்  ஒரு லைசன்ஸாக நம் சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இக்கருத்தை முன்வைக்கும் வகையில் கோணங்கியை கண்டிக்கிறவர்களை எல்லாம் பாமரத்தனமானவர்கள் என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். 

கோணாங்கி விவகாரம் மிகத் தீவிரமாக பேசப்பட்ட காலத்தில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையில் “ இலக்கியவாதிகளிடம் மிக அரிதாக அதீதப் பிறழ்வுகளும் இருக்கலாம், அதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒரு பாமரனிடம் அது இருந்தால் அது மிகவும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதும்தான். ஏனேன்றால் அவன் எதையும் உருவாக்குபவன் அல்ல. இலக்கியவாதியிடன் அவனுடைய படைப்புசக்தியின் மறுபக்கமாகவே அது உள்ளது. அதன் பொருட்டு அவன் மன்னிக்கப்பட வேண்டும் ஏற்கப்பட வேண்டும் என நான் சொல்லவில்லை. ஆனால் அதன் பொருட்டு அவன் பாமரர்களால் வேட்டையாடப்பட;லாகாது. அப்புரிதல் ஒரு சமூகத்தில் சிலரிடமாவது வேண்டும்.”

 தன் கருத்துக்கான ஆதாரங்களை வரலாற்றிலிருந்து முன்வைக்கிறார் ஜெயமோகன். “ வரலாறெங்கும் பெருங்கலைஞர்கள், கவிஞர்கள் பிழைபட்ட ஆளுமை கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். கம்பன் தாசித் தெருவில் அலைந்தவன். கம்பராமாயணம் தமிழிலக்கியத்தின் உச்சம். மெளனியும் ஜி நாஜராஜனும் விபச்சாரத்திலும் குடியிலும் திளைத்ததை அப்படித்தான் இலக்கிய உலகம் புரிந்துக் கொள்கிறது. தாசியின் வீட்டு திண்ணையில் நோயுற்றுக் கிடந்து மறைந்த இசை மேதைகள் தமிழகத்தில் உண்டு. தாகூரின் தீராதக் காதல் வேட்கைகள்  அவருடைய எண்ணற்ற காமத்தொடர்புகள் தாகூர் மறைந்து ஐம்பதாண்டுகளுக்குப் பின்னரும் அவருடைய காதலிகள், கள்ளக்காதலிகள் கண்டடையப்பட்டனர். ஆனாலும் தாகூர்தான் இந்தியாவின் கவிமுகம். அவர் மதிக்கப்பட்டது அவருடைய நுண்ணுணர்வாலும் அதன் வெளிப்பாடான கவிதையாலும்தான். அவர் நல்ல மனிதர் என்பதனால் அல்ல. அந்த வேறுபாட்டை உணராதவர்கள் பாமர்ரகளே “  இப்படியாக ஜெயமோகன் கோணங்கியை எழுத வரும்போது காட்டும் இந்த எடுத்துக்காட்டுகளில் தனிமனித  ஒழுக்க மீறல் இருக்கிறதே தவிர பாலியல் சுரண்டலோ தன் அதிகாரத்தை தங்கள் பாலியல் மீறலுக்குப் பயன்படுத்திக் கொண்டதாகவோ இல்லை. இந்த சமூக வேறுபாடு அறியாதவர் அல்ல ஜெயமோகன். ஆனால் எதோ ஒருவகையில் ஜெயமோகன் கோணங்கிக்கு அராத்து சொன்னது போல மயிலிறகால் தடவிக் கொடுக்கிறார் என்பதை ஒரு பாமர வாசகனும் புரிந்துக் கொள்ள முடியும். 

       பெண்ணியம் என்பது ஒற்றைப்புள்ளியில் அடங்கிவிடும் தளமல்ல,

பாலியல் சுரண்டல் என்பது அனைவருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை.

சமூகத்தில் எத்தனைப் பிரிவுகள் இருக்கிறதோ அத்தனையும் பெண்களிடமும்

படிந்திருக்கிறது. அவள் பெண் என்பது மட்டுமல்ல அவளுடைய அடையாளம்.

பல்வேறு வர்க்க இன சாதி மத கலாச்சார அடையாளங்களின் பின்னணியில் தான் அவள் அனுபவங்களை அணுக வேண்டி இருக்கிறது. (intersectionality in feminism)


  காய்த்தல் உவத்தலின்றி இப்பிரச்சனையில் வெளிப்படையாக தெரியும்

சில குளறுபடிகளையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

பாதிக்கப்பட்டப் பெண் சின்மயி விவகாரத்தைப் பேசும் ஊடகங்கள் இது தொடர்பான பலரின் கருத்துளை முழுமையாக முன்வைக்காமல் ஒரு சில வரிகளை மீண்டும் மீண்டும் பேசுகின்றன. 

குறிப்பாக ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி , பாடகியும் இசையமைப்பாளருமான ஏ ஆர் ரெஹானா அவர்கள் பாடகி சின்மயி விவகாரம் குறித்தும்

சின்மயி குறித்தும் என்னவெல்லாம் சொன்னார் என்பதைப் பற்றி முழுமையாக சொல்லாமல் ‘வைரமுத்து  நடத்தை குறித்து பல  பெண்கள் தன்னிடம் சொன்னதாக’ சொன்னதை மட்டும் மீண்டும் மீண்டும் ஒலிப்பரப்பிக் கொண்டி,ருக்கிறார்கள்.

  சின்மயியுடன் சேர்ந்து மொத்தம் 17 பெண்கள் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள்.  அதில், பாடகி சின்மயி

பதிவு செய்திருக்கும் #metoo 17 ..  குற்றச்சாட்டை வாசித்தேன். அதில், 

கல்லூரி மாணவி புத்தகவெளியீட்டில் வைரமுத்துவை  சந்திக்கிறார். அதன் பின் டிவி சேனலில் அப்பெண்ணின் கைபேசி எண்ணை கேட்டு வாங்குகிறார் வைரமுத்து. அதன் பின் அப்பெண்ணை தனியே வந்து சந்திக்கும்படி அழைத்ததாக அப்பெண் சொல்கிறார். இதுவரை ஒகே. 

ஆனால், ஒரு மணி நேரத்தில் 50 அல்லது 60 முறை போனில்

அழைத்துக்கொண்டே இருந்ததாக கூறுவது , போன் தொடர்பு எண்ணை அந்தப் பெண் மாற்றிக்கொண்டே இருந்தாலும் அதையும் கண்டுபிடித்து வைரமுத்து தொந்தரவு செய்ததாக கூறுவது….

இதை வாசித்தவுடன் எழும் சில கேள்விகளைத் தவிர்க்கமுடியவில்லை.

 ஒருவரின் அழைப்பு தொந்தரவு செய்கிறது என்றால் அவரை ப்ளாக்

(block) செய்துவிடும் வசதி உண்டு. எண்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை!     மேலும் இப்பிரச்சனையை  ஊடக நண்பர்கள் உதவியுடன் வைரமுத்து மனைவியை அணுகி ஒருவழியாக இப்பிரச்சனையிலிருந்து விடுபட்டதாக சொல்லியிருக்கிறார் 

#metoo 17 பெண்.!

இதை எல்லாம் வாசிப்பவருக்கு என்னமாதிரியான சந்தேகங்கள்

எழுகின்றன என்பதை அவரவர் வாசிப்பு அனுபவத்திற்கே விட்டுவிடுகிறேன்.


. வைரமுத்து சார்பாகப் பேசிவிட்டால் எங்கே தானும் பாலியல் சுரண்டலுக்கு உடந்தையானவராக அதை ஆதரிப்பவராக இருக்கிறோம் என்று சமூகம் நினைத்துவிடக் கூடாதே என்ற தற்காப்புடன் மவுனமாக இருக்கிறது திரையுலகமும் இசையுலகமும் அரசியல் உலகமும்.. 

இதுபற்றி கருத்து சொல்லியவர்களும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும்

பாடலாசிரியர்கள்தான் தன்னிலை விளக்கம் சொல்ல வேண்டும்

என்று சொல்கிறார்கள். அதாவது தனிப்பட்ட ஓர் ஆண் பெண் சார்ந்த

தனிமனிதப் பிரச்சனையாக பார்க்கிறார்கள். சின்மயிக்கு ஆதரவாக

எழுதி இருக்கும் தாமரை தன் வாழ்க்கையின் சொந்த அனுபவத்துடன்

இதையும் அணுகி இருக்கிறார். பாடலாசிரியர் தமயந்தியும் சின்மயி பக்கம்

தன் ஆதரவை வெளிப்படையாக முன்வைத்திருக்கிறார்.

    ஓஎன்வி விருது மறுபரிசீலனைக்கு உள்ளான இக்கட்டான தருணத்தில்

தமிழ் இலக்கிய உலகம் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் கடந்து

சென்றிருக்கிறது புதுக்கோட்டை எழுத்தாளர் நா. முத்து நிலவன் அவர்கள்

“ வைரமுத்து இந்த விருதுக்கு தகுதியானவரில்லை என்றால்

வேறு யாருக்குத்தான் அந்த தகுதி இருக்கிறது” என்று இலக்கிய விருதின்

பக்கமாக நின்று குரல் கொடுத்திருக்கிறார். 

   குடும்பத்தில் பள்ளிப்பருவத்தில் கல்லூரி வளாகத்தில் பேருந்தில் பயணத்தில் கூட்ட நெரிசலில் பணி செய்யும் இடத்தில்..இப்படியாக ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்தே மவுனமாக தன் வாழ்க்கையில் பாலியல் கொடுமையை அத்துமீறலை சுரண்டலை பாலியல் வக்கிரத்தை கடந்து வந்திருக்கிறாள். அதனால்தான் பெண்ணியப்பெருவெளி, சின்மயியின் குரலுக்கு செவிசாய்க்கிறது. தார்மீக ஆதரவு கொடுக்கிறது.

   எழுத்தாளர் கேரளாவில் புகழ்பெற்ற கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.,

தன் சுயசரிதை ‘சிதம்பர நினைவுகள் ‘ பக்கத்தில் தன் சபலம் குறித்து

எழுதி இருப்பது நினைவுக்கு வருகிறது.

 அவர் வீட்டில் இருக்கும் போது ஊறுகாய் விற்கும் ஒரு இளம்பெண் வருகிறாள். அவளிடம் சபலப்படும் சுள்ளிக்காடு தவறாக நடக்க முயற்சிக்கிறார். அந்தப் பெண்ணோ அவரை அடித்து விட்டு திட்டுகிறாள். “தான் உடலை விற்றுத்தான் வாழ வேண்டுமென்றால் ஊறுகாய் விற்க வந்திருக்க வேண்டியதில்லை” என்று சீறுகிறாள். பிறகு அவர் புகழ்பெற்ற எழுத்தாளரான சுள்ளிக்காடு என்று அடையாளம் காண்கிறாள். 

     தவறு செய்த சுள்ளிக்காடு பின்னர் கூனிக்குறுகி இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறுகிறார். அந்தப் பெண்ணும் ஆத்திரத்தில் அடித்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறாள். யாரிடமும் இதை சொல்ல மாட்டேன் என்றும் கூறுகிறாள். பின்னர் அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு கூட சுள்ளிக்காடு செல்கிறார்.  ஓர் ஆணாக தன் சபலத்தை வெளிப்படுத்தியதற்கு அவர் வெட்கப்படவில்லை. . இத்தகைய தைரியம் எத்தனை பேருக்கு வரும்? சபலப்படுபவர் அடையும் குற்ற உணர்வும், அதை எப்படித் தீர்ப்பது என்ற வழிமுறையும் சுள்ளிக்காடு விசயத்தில் காண்கிறோம். மேலும் பொதுவெளியில் அனைவர் முன்னும் அதை உரக்கச் சொல்லும்போது அதுவே அவருடைய   நேர்மையின் வெளிப்படாகி கொண்டாடப்படுகிறது. 

   தமிழ் கலை இலக்கிய வெளியில் சுள்ளிக்காடு போல தன் மனப்பிறழ்வை, சபலத்தை, பாலியல் உறவை  வெளிப்படையாக யாரும் பேசியதாக தெரியவில்லை. தமிழ்ச் சமூகம் பாலியல் விவகாரத்தில் ஒரு இரும்புத்திரையை அணிந்திருக்கிறது.

No means NO.

வேண்டாம், விருப்பமில்லை, முடியாது என்று ஒரு பெண்

சொன்னால் ஆண் பெண் உறவில் அதிகாரமிக்க ஆணுலகம்

அதைக் கேட்டாக வேண்டும். தவறினால் தலைகுனிவுகள் ஏற்படும்.

பாலியல் சுரண்டலை பெண் எதிர்க்கும் வல்லமை இதுவரை ஆண்

சந்திக்காத பெண்ணுலகம், பெண்ணின் பேராற்றல் போற்றுதலுக்குரியது.

ஆண் , பெண்ணின் எதிரி அல்ல.

ஆணும் அவன் நட்பும் காதலும் இல்லாத உலகில்

வாழ எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை.

அவள் உடல் மீதான அதிகாரம் அவளுக்கானது.

அதை எந்த அதிகாரமையமும் தனக்கானதாக ஆக்கிக்கொள்ள

முடியாது. 

நம் சட்டங்களும் நீதிமன்றங்களும் சாட்சிக்கூண்டுகளில்

சிறைப்பட்டிருக்கின்றன. . எல்லாவற்றையும் சட்டத்தின் முன்னால்

நிறுத்தி நீதிப் பெற முடியாது. அதனால்தான் எழுதப்பட்ட சட்டம் செய்யாததை மனித இனத்துக்கு மட்டுமே இருக்கும் மனசாட்சி

செய்துவிட முடியும் என்று நம்புகிறோம்.


நடந்தது என்ன?

சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரின் மனசாட்சி மட்டுமே

அறியும். வாழ்வில் ஒவ்வொருவரும் தங்கள் செயல்களுக்கான

தண்டனைகளையும் நியாயங்களையும் மனசாட்சியின் முன்னால்

வைக்கட்டும்..  நாமும் தான்.


பின்குறிப்பு. 

தரவுகள்  கட்டுரையில் எடுத்தாளப்பட்டிருக்கும் எழுத்தாளர்களின் இணையதளம்  வலைப்பூ முகநூல், டுவிட்டர், யு டூயுப் பதிவுகளிலிருந்து )

நன்றி: அம்ருதா இதழ்  ஜூலை 2025

#புதியமாதவி

#பாலியல்சுரண்டல்கள்

#அம்ருதாஇதழ்_புதியமாதவி

#வைரமுத்து_சின்மயி

#கோணங்கி



Saturday, August 16, 2025

நவீன மயான காண்டம்




 "வெள்ளை யானை என்பது 

எங்களின் புதிய உலகம்" டும்.


மயான காண்டம்

இது அரிச்சந்திரனின் மயானம் அல்ல.

மயானத்தில் அசலாக வாழும் மனிதர்களின்

மயான காண்டம்.

ஞா. கோபி எழுதிய நவீன நாடகம்.( மாற்று நாடகம்.)

வாசிக்கும் போதே ..

இந்த நாடகப் பிரதி

நம்மை 

வெள்ளை யானையில்

பயணிக்க வைக்கிறது.


" வெள்ளை யானை என்பது 

எங்களின் புதிய உலகம்" டும்.


🔥🔥🔥🔥🔥

ஆயிரம் சாம்பான் மாண்ட கதை அறிந்தவன் நான்.

டும்

போதும் இந்த மரணக் கதைகள்.

டும்

இனி ஒடுக்குதலுக்கு எதிராய் நான் நிற்பேன்

டும்

மனிதனை மனிதன் ஒடுக்கும் சாதி

டும்

அதுவே இங்கு வேதங்கள் சொல்லும் நீதி

டும்

ஆணவக் கொலையில்

மாண்டவர் கோடி

டும்

கோடியில் அத்தனையும் மறைக்கப்பட்ட நீதி

டும்


இனியும் பொறுப்பது அழகில்லை மனிதருக்கு

டும்

இப்போ எல்லாம் யாரு சாதி பாக்கிறா

டும்

அவனிடம் கேளு...


உன் ஊரில் மலக்குழியில் அடைப்பெடுக்க நீயே இறங்குவாயா என்று

டும்.


இறுதியில் எதுவும் கொண்டு போவதில்லை என்பானே அவனிடம் கேளு

டும்

செத்தும் உன் பிணம் எரிக்க சாதிக்கு ஒரு இடமும் எரிக்கும் தணலில் நின்று வேலை செய்ய ஒருவனை ஒதுக்கினீரே அது ஏன் என்று

டும்


மறக்காதீர் செத்ததும் மாறும் பேய் கதையை போல

சுடுகாட்டிலும் சாதிப்பேய் அலையுது காண்பீர்

டும்


🔥🔥🔥🔥


என் மாடனே சொல்கிறேன் கேளும்

இனி முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன்

என் கேள்விக்கு விடை கிட்டும் வரையில்

தன்உரிமையை நான் எதிலும் விட்டுத் தர மாட்டேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

அந்த வழியதுவே நான் போகும் சமத்துவப் பாதை

🔥🔥🔥🔥


உனக்கு அந்த அதிகாரம் செய்ததை

டும்

நீ யாருக்கும் செய்திடாதே

டும்

மனிதர் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்ட

ஆயிரம் சான்று உண்டு

வெள்ளை யானை வரும்

அதில் நீ நம்பிக்கையாய் அமர வேணும்

டும்

எல்லோருக்கும் ஓர் வானம்

எல்லோருக்கும் ஓர் பூமி

டும்

உன் தொழிலை உணவை வாழ்வை நீ இனி முடிவு செய்.

டும்


அதிகாரமே வழிய விடு

டும்.

வெள்ளை யானை எங்களின் புதிய கற்பனை 

டும்

வெள்ளை யானை எங்களின் புதிய உலகம்.

டும்.


🔥🔥🔥


வாழ்த்துகள்: 💐💐 நாடக ஆசிரியர் ஞா. கோபி 💐 Gopi Puducherry.

நன்றி : காவ்யா காலாண்டிதழ்🙏

மலர் 14 இதழ் 1

Thursday, July 24, 2025

கலாப்ரியா கவிதைகள்

 


காலமே காட்சியாகும் கலாப்ரியா கவிதைகள்..

Tk Kalapria 


கலாப்ரியாவின் கவிதைகளில் வாழ்விடமும் மனிதர்களும் கவிதையாகி நம்மை அந்த உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இனி வரும் தலைமுறைக்கு அவர் கவிதையின் முதற்பொருள் " இப்படி எல்லாம் இருந்ததாம்" என்று ஓர் ஆவணமாக மாறும்.

இப்புறச்சூழலைக் காட்சிப்படுத்தும் கவிதைகளின் ஊடாக அவர் கையாளும் கருப்பொருட்களும் கவிதையின் உணர்வு சரடில் கச்சிதமாக பொருந்தி நிற்கும்.

என் வாசிப்பில் கவிஞர் கலாப்ரியாவின் கவிதைகளின் தனித்துவமாக இதை உணர்கிறேன்.


முதுகலை படிக்கும்போது கலாப்ரியா வின் கவிதை வரிகள் இரண்டை வைத்துக் கொண்டு ஏகப்பட்ட ரகளை செய்திருக்கிறேன்.

அது தனிக்கதை.😃


அவருடைய கவிதைகளின் தனித்துவத்தை ஒரு வாசகராக இப்போதும் கொண்டாடுகிறேன்.

அவர் கவிதைகளின் முதற்பொருளும்  கருப்பொருளும் எனக்கு அந்நியமானவை அல்ல, என்பதும் கூட அவர் கவிதைகளை மிகவும் நெருக்கமாக எனக்கான உலகமாக மாற்றி இருக்கலாம் என்ற 

ஓர்மையுடன் நான்.

 கவிஞர் கலாப்ரியாவுக்கு வாழ்த்துகளுடன்..💐💥🎻


கலாப்ரியா கவிதை:

கறுப்பேறிப்போன

உத்திரம்,

வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு

கையெட்டும் உயரத்தில்.

காலேஜ் படிக்கும் அண்ணன்

அதில் அவ்வப்போது

திருக்குறள்,

பொன்மொழிகள் – 

சினிமாப் பாட்டின்

நல்வரிகள் – என

எழுதியெழுதி அழிப்பான்

எழுதுவான்.

படிப்பை நிறுத்திவிட்டு

பழையபேட்டை மில்லில்

வேலை பார்க்கும் அண்ணன்

பாஸிங்ஷோ சிகரெட்டும்

தலைகொடுத்தான் தம்பி

விளம்பரம் ஒட்டிய

வெட்டும்புலி தீப்பெட்டியும்

உத்திரத்தின்

கடைசி இடைவெளியில்

(ஒளித்து) வைத்திருப்பான்.


அப்பா வெறுமனே

பத்திரப்படுத்தி வந்த

தாத்தாவின் – பல

தல புராணங்கள்

சிவ ஞானபோதம்

கைவல்ய நவநீதம்

சைவக்குரவர் சரித்திரங்கள்

பலவற்றை,

வெள்ளையடிக்கச் சொன்ன

எரிச்சலில் – பெரிய அண்ணன்

வீசி எறியப் போனான்.

கெஞ்சி வாங்கி

விளக்கு மாடத்தில்

அடைத்ததுபோக

உத்திர இடைவெளிகளில்

ஒன்றில் தவிர

அனைத்திலும்

அடைத்து வைத்திருப்பாள்

அவன் அம்மா.


முதல்பிள்ளையை

பெற்றெடுத்துப் போனபின்

வரவே வராத அக்கா

வந்தால் – 

தொட்டில் கட்ட

தோதுவாய் – அதை

விட்டு வைத்திருப்பதாயும்

கூறுவாள்.

நின்றால் எட்டிவிடும்

உயரம்

என்று

சம்மணமிட்டு

காலைக் கயிற்றால் பிணைத்து – 

இதில்

தூக்கு மாட்டித்தான்

செத்துப் போனார்

சினேகிதனின்

அப்பா.

Wednesday, July 16, 2025

தோழர் மலரின் கதை



தோழர் மலரின் கதை.

இது  புனைவல்ல. உண்மை.
சில அதிசயங்களும்
சில நம்பிக்கைகளும்..
🔥🔥🔥🔥

 அவளை மாடு முட்டி காலால் மிதித்தது. அவ்வளவுதான் அவளுக்கு இன்றுவரைத் தெரியும். மற்றதெல்லாம் அவளைப் பற்றி அவள் பெற்றோரும் உடன்பிறப்புகளும் அண்டைவீட்டாரும் பள்ளிக்கூடத்தில் அவளுடன் படித்த
அவள் தோழியரும் சொல்ல அவள் அறிந்தவைகளாக மட்டுமே இருக்கின்றன.

  காஞ்சிபுரம் ஐயன்பேட்டை கிராமத்தில் கோவி. கலியமூர்த்தி, சந்திரா இருவருக்கும் பிறந்த மகள் மலர்விழி. மாடு முட்டுவது மாடு மிதிப்பதெல்லாம் மிகவும் சாதாரணமாகவும் அதனால் ஏற்படும் காயங்களும் வீக்கங்களும் கைவைத்தியத்தில் சரியாகிவிடும் என்பதே மக்கள் நம்பிக்கையாக இருந்தது. எனவே மகள் மலர்விழியை மாடு மிதித்துவிட்டது என்பதை யாருமே பொருட்படுத்தவில்லை. மலர்விழிக்கு வலி இருந்த இடத்தில் தைலமோ கைமருந்தோ தடவி இருப்பார்கள். ஆனால் இரவு தூங்கி எழுந்தப் பின் மலர்விழியின் உடல் வீங்கி ஒரு விகாரமான தோற்றம் ஏற்பட்டது. அத்துடன் காய்ச்சலும் சேர்ந்துக் கொண்டது. அவள் உடலின் வீக்கம்தான் காய்ச்சலைவிட மிகப்பெரிய அச்சுறுத்தலைப் பெற்றொருக்கு கொடுத்திருக்கும். 

அவர்கள் காஞ்சிபுரம் பார்த்தசாரதி மருத்துவமனைக்கு
தங்கள் மகளைக் கொண்டு காட்டுகிறார்கள். உடல் பரிசோதனைக்குப் பிறகு
மருத்துவர் குழந்தையின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால்தான் உடல் வீக்கம் எடுத்திருக்கிறது என்று சொல்லி உடனடியாக அவளுக்கு ஓரு ஊசிப்போட்டாக வேண்டுமென சொல்கிறார். அந்த ஊசியின் விலை 1983 ல்
ரூ 600. மலர்விழி சொல்கிறார் அந்தப் பணம் என் அப்பாவின் ஒரு மாதச் சம்பளத்தைவிட இரண்டு மடங்கு என்று. மகளின் உயிரைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று கலியமூர்த்தி கடன்பட்டு ஊசி வாங்கி சிகிச்சை எடுக்கிறார்கள். மலரின் உடல் வீக்கம் சற்று குறைகிறது என்றாலும் மலர் யாருடனும் எதுவும் பேசவில்லை. அவளுக்கு தன்னைச் சுற்றி யார் என்ன பேசுகிறார்கள், என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. மருத்துவர்களால் அவள் நிலைக்கு காரணம் இதுதான் என்று தெளிவாக சொல்லவும் முடியவில்லை. இந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விடுகிறார்கள். மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

மலர்விழியின் அம்மாவும் அப்பாவும் வேறு வழியின்றி தங்கள் மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனையிலிருந்து தங்கள் வீட்டுக்கு வரும் வழியில் மலர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.

 மலரின் அம்மா சந்திரா வரும் வழியில் தன் குழந்தையுடன் இறங்கி அந்தக் கோவிலுக்குப் போய்விடுகிறார். ஐயன்பேட்டையிலிருக்கும் சந்தோலி அம்மன் கோவிலின் வாசலில் உட்கார்ந்து விடுகிறார். 
“தாயே என் மகளை நீ குணப்படுத்தாமல் நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்” சங்கல்பம்…எடுக்கிறார். அவருடைய மன உறுதியை யாராலும் அசைக்க முடியவில்லை. கணவர் கலியமூர்த்தி மருத்துவர்கள் முடியாது என்று சொல்லிவிட்டார்கள், இது தேவையில்லாத வீம்பு, நம் மகளுக்கு இதுதான் தலைவிதி, இதை மாற்றமுடியாது , ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்” என்று எவ்வளவோ எடுத்துச் சொல்கிறார்;. ஆனால் மலரின் அம்மா யார் சொல்வதையும் கேட்பதாக இல்லை. சந்திரா தன் மகளுடன் சற்றொப்ப ஆறு மாதங்கள் அந்தக் கோவிலில் தன் வேண்டுதலுடன் உட்கார்ந்திருக்கிறார். 

 அவருக்கு உணவு, மாற்று உடை என்று வீட்டிலிருந்தும் ஊரிலிருந்தும் கொண்டுவருகிறார்கள். நாள்கள் செல்ல செல்ல அனைவருக்கும் அவள் செயல் முட்டாள்தனமாக தெரிகிறது. ஆனால் அவள் மட்டும் உறுதியாக இருக்கிறாள். தாய் சந்திராவுக்கும்  ஊர்த்தெய்வம் சந்தோலி அம்மனுக்கும் நடுவில் காலம் மெளனமாக இருக்கிறது. கோவிலில் பூஜைக்குப் பின் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் (தண்ணீர்) மட்டும்தான் சந்திரா தன் மகளுக்குன் கொடுத்த ஒரு மருந்து எனலாம். 

மலர் அழவில்லை. சிரிக்கவில்லை. ஏன் கோவிலில் இருக்கிறோம் அம்மா என்று கேட்கவும் இல்லை. அவளுக்கு அவளைச் சுற்றி நடந்துக் கொண்டிருக்கும் எதுவுமே தெரியவில்லை. அவள் தன் சூழலுக்கு எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றவில்லை.

  திடீரென ஒரு நாள் அந்த விடியல் மட்டும் வேறொரு சூரியனை அனுப்பியது. சந்தோலி அம்மன் முதல் முறையாக பேச ஆரம்பித்தாள். ஆம்,
குழந்தை மலர் வாய்திறந்து பேசினாள். “அம்மா, நம்ம வீட்டுக்குப் போகலாம்”
அவ்வளவுதான் அவள் பேசிய வார்த்தைகள்!

 அதுவரை வாய்த்திறந்து எதுவும் பேசாத மகள் பேசிவிட்டாள், இனி எல்லாமும் சரியாகிவிடும் என்று அம்மா சந்திரா நம்பினாள். ஊரும் உறவுகளும் அந்த நாளைக் கொண்டாடின. மகளை வீட்டிற்கு அழைத்துவந்து சடை விழுந்த கூந்தலில் நீருற்றி  நீராட்டினாள். சடை சடையாக பின்னலிட்டு இருந்த கூந்தல் தண்ணீரை ஊற்றியவுடன் அப்படியே கையொடு வந்துவிட்டது. தலைமுடி மட்டுமல்ல, அவள் புருவம், இமை முடிகளும் உதிர்ந்துவிட்டன. ஒரு விகாரமான தோற்றத்தில் குழந்தை மலர்விழி 
மெல்ல மெல்ல மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தாள்.
 சில ஆண்டுகள் தான் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்ததே இல்லை என்கிறார் மலர்விழி. அவர் வீட்டில் மட்டுமல்ல, அண்டை வீடுகளிலும் அக்குழந்தையின் மன நலம் பாதுகாக்கப்பட்ட து. யாரும் அக்குழந்தையின் விகார தோற்றத்தைக் காட்டியோ பேசியோ அக்குழந்தையின் மனசைத் துன்புறுத்தவில்லை. இதெல்லாம் அவர்களுக்கு யாருமே சொல்லிக் கொடுக்காமல் வந்தப் பண்பாடு. நயத்தக்க நாகரிகம்.

மலர்விழியின் அம்மா அவருக்கு தேங்காய்ப் எண்ணெய் மட்டுமே தேய்ப்பாராம். முடி வளர்ந்திரும் பாருங்க.. என்று நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார் சந்திரா. அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை.
 மலரின் வாழ்க்கையில் இத்துயர சம்பவம் நடந்தப்போது அவர் 
ஐயன்பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அதன் பின் அரசு மேல் நிலைப் பள்ளி சின்ன காஞ்சிபுரத்தில் ஒன்பது முதல் பதினொரு வரை படித்திருக்கிறார்.
வடக்குத் தெரு, நடுத்தொடு, கந்தபார் தெரு என்று மூன்று தெருக்களும் அவற்றை இணைக்கும் சதுரவடிவில் அமைந்த ஊரும் அவரை ஒதுக்காமல் தங்கள் வீட்டில் ஒரு குழந்தையாக அரவணைத்திருக்கிறது.

 மலர் தன் நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டபோது அந்த ஐயன்பேட்டை சந்தோலி அம்மனைப் பார்க்கணுமே என்றேன். 
வீட்டுக்கு வாங்க தோழர், எங்க அம்மா சந்திராவைப் பாருங்க..” என்றார்.
அவருக்கு அவர் வாழ்க்கையின் நிகழ்ந்த அதிசயங்களை சந்தோலி அம்மனுடன் முடிச்சுப் போட விருப்பமில்லை. ஒரு தாயின் உறுதி , நம்பிக்கை என்று விளக்கம் தருகிறார். என் அம்மா செய்ததெல்லாம் எனக்கு தினமும் அக்கோவில் துளசி நீரைக் கொடுத்ததுதான் என்று அறிவியல் விளக்கமும் தருகிறார் தோழர் மலர். 

 சந்திரா என்றால் என்ன? சந்தோலி என்றால் என்ன? இருவருமே மலருக்கு அன்னையர்தான். அம்மா என்ற  மாபெரும் சக்தியில் சந்தோலி அம்மனும் கரைந்து கண் திறந்திருப்பாள் தானே. 

 இன்று தோழர் மலர்விழி, தமுஎகச வின் மிக முக்கியமான களப்பணியாளர். 2008ல் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன் மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை “செம்பருத்தி குழந்தைகள் உலகம்” என்ற பெயரில் ஆரம்பித்தார்.  விருதுநகர், திருச்சி, இராமநாதபுரம் , மதுரை, கடலூர், சென்னை என்று பரந்துப்பட்ட அவர் பயணம் மாணவர்களின் பல மேம்பாட்டு திறன்களுக்கு வழிகாட்டியது. அதன் செயல்வடிவமாகவே ‘மழலைச்சொல் ‘ என்ற பதிப்பகம் ஆரம்பித்து குழந்தைகள் பெற்றோர்கள் ஆசிரியர்களைக் கொண்டு குழந்தைகளுக்கான கதைகளை எழுத வைத்தார். 
39 புத்தகங்கள், 16 பக்கங்களுக்குள் வடிவமைக்கப்பட்டு வெளிவந்துள்ளன.
இன்றும் குழந்தைகளின் கால்களாகவும் காதுகளாகவும் பயணித்துக் கொண்டிருக்கிறார் தோழர் மலர்விழி.

(தோழர் மலரும் நானும் வள்ளியூரில் நுங்கு சர்ப்பத்துடன்)

Monday, July 14, 2025

என்னைப் பெத்த அம்மாஆஆஆ

 



‘எப்ப வந்த தாயி.. ? ‘

மாட்டைப் பத்திக்கொண்டுப் போகும் கோனார் மாமா கேட்டார்.

‘வந்துப் பத்து நாளு ஆவுது மாமா.. ‘

‘என்ன இன்னும் அப்படியேதான் கிடக்காளா.. ‘

‘யோவ் கோனாரு ..சாகப்போறவக்கிட்டே ஏன் போட்டிப்போடுதேரு..உள்ளெ வந்து நாடிப் பிடிச்சுப் பார்த்துதான் சொல்லப்பிடாதா.. மூவடையா இன்னும் எத்தனை நாளைக்கு இந்தப் பிள்ளைய இப்படிக் காக்கப் போடப்போறாளோ தெரியலையே.. ‘ சின்னம்மா அழுது கொண்டே அலுத்துக் கொண்டாள்.

கோனாரும் மூவடையாளும் ஒரே கிணத்தில் குளித்தவர்கள்.. ஒரே குளத்தில் அயிரை மீனைப் பிடித்து விளையாண்டவர்கள்..

என்ன ரண்டு பேருக்கும் ஒருவித சண்டை நேசம் உண்டு.அந்தக் காலத்திலிருந்தே அப்படித்தான். இப்பவும் ரண்டு பேருக்கும் அப்படித்தான் சண்டை வந்தது.

ஆண்பிள்ளை இல்லாதவர்களுக்கு அரசு மானியமாக அறுபதோ எழுபதோ மாசமாசம் கொடுக்கின்றது. உனக்கென்ன கொடுத்து வச்சவா.. மாச மாசம் பொண்ணு வேற பணம் அனுப்பறா.. கவர்மெண்ட் பணம் வேறு .. ‘ என்று சொல்ல

ப்டி பிடி என்று பிடித்துக் கொண்டாள் மூவடையா..

மூவடையாளுக்கு யாரும் அவளைக் கொள்ளி வைக்க ஆண்பிள்ளை இல்லாதவள் என்று சொல்லிவிட்டாள் போதும் .. அவ்வளவுதான்.. அன்னிக்கு பூரா ஊர்ச்சனம் தூங்கினப்பிறகும் அவள் குரல் அடங்காது.. சகட்டுமேனிக்கு எல்லாரையும் ஏக வசனத்தில் அறுத்து வாங்குவாள்..மூவடையா வாய்க்குப் பயந்தே பலர் அவளிடன்

அதிகம் பேசமாட்டார்கள்.

ஆனா மூவடையா கடும் உழைப்பாளி. எல்லோருக்கும் கிணத்தில் தண்ணிரில்லை எப்படி விவசாயம் செய்வது என்று கவலையிலிருக்க இவள் மட்டும் பஞ்சாயத்து போர்டில் கொடுத்த இரண்டு ஆட்டை வைத்து வியாபாரம் ஆரம்பித்துவிட்டாள்.

வேறென்ன.. ஆட்டுப்பாலில் நல்ல இஞ்சிக் கலந்த டீ போட்டு காலையில் மலையாளத்து மார்க்கெட்டுக்குப் போகும் லாரி டிரைவர்களுக்கு வண்டி லோட்ஏற்றும் இடத்திற்குப் போய் விற்றுவிட்டு வருவாள்.


அரைமணி நேரம் நடந்துப் போய் இவள் விற்கின்றாள் என்பதைவிட இவள் எப்போதடா நமக்கு இஞ்சி சாயாக் கொண்டுவருவாள் என்று லாரி டிரைவரிலிருந்து ரிக்ஷா டிரைவர் வரை காத்திருப்பார்கள்..

எப்படியும் ஒரு நாளைக்கு பத்து முதல் இருபது வரை லாபம் கிடைக்கும்.

அதுபோதும் அவளுக்கு.. அவள் என்ன ஒத்தக் கட்டை..

இப்போது படுக்கையில் விழுந்து பதினைந்து நாளாகின்றது.

பெரிய டாக்டரு எல்லாம் ‘சரி .. சொல்றவுங்களுக்கு சொல்லிடுங்க.. ரொம்பநாளு தாக்குப்பிடிக்காது என்று சொல்லிவிட்டார்.

மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு..

பணம் செலவு செய்தால் சுகமாக்க கூடிய வியாதி தான்.

அறுவைச் சிகிச்சைக்கே இரண்டு லட்சம் ஆகும். இவர்களால் முடியாது என்பது டாக்டருக்கும் தெரியும். அதுதான் கையை விரிச்சுட்டார்.

அது தெரியாமல் அவர் முடியாதுனு சொன்னதையே அவருக்குடைய சிறப்பாக அந்த ஊர்ச் சனங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்..

‘ சும்ம சொல்லப்படாது.. அவுங்க அப்பா கோட்டையிடி வைத்தியரு மாதிரியே தான் இவரும்.. நம்மளை ஏமாத்தி பைசாப் பிடுங்க மாட்டாரு.. முடியாட்டா முடியாதுனு கரைக்கட்டா சொல்லிப்புடுவாரு.. இப்படித்தான் போனமாசம் பால்தேவர் அப்பாவுக்கு நாள் குறிச்சுக் கொடுத்துபுட்டாராம்..பிறகென்ன.. பால்தேவரு அக்கா தங்கச்சினு எட்டுபேருல்லே அத்தனை பேருக்கும் சொல்லிவிட்டு எல்லாலுவளும் வந்து பாலு ஊத்தி தான் காரியம் முடிஞ்சிருக்குனாப் பாத்துக்காங்களேன் ‘

கோனாரு கைகாலை கழுவிட்டு தாழ்வாரத்தில் கயித்துக் கட்டிலில் கிழிந்த தலையனை மாதிரி ஒரு சின்ன ஓலைக் கூடையில் வச்சி எடுத்துட்டுப் போற பருத்திப் பஞ்சுமாதிரி கிடக்கின்ற மூவடையா கையை தூக்கி நாடிப் பிடித்து பார்த்தார்..

ஒரு நிமிடம் அமைதி..

எல்லோரும் அவரு முகத்தையே பாத்திட்டிருந்தாங்க..

‘எல்லா நாடியும்தான் அடங்கிபோச்சே.. ஏ மூவடையா.. என்னத்தை நினைச்சிக்கிட்டுஇருக்கே.. ‘

அதுதானே.. அந்தப் பிள்ளையும் பிள்ளை குட்டிகளை விட்டுட்டு போட்டது போட்டபடிக் கிடக்க ஓடி வந்திருக்கு.. அவ மாப்பிளை நல்ல அமந்த குணம்..அதுதான் பேசாமா இருக்கு.. இவ இப்படிக் கிடந்து கடைசியிலே பால் ஊத்த யாருமில்லாமலே காய்ஞ்சிப் போகப் போறாளா..

எப்படியும் ரண்டு நாள்ளே அடிச்சிடும்.. வெள்ளிக்கிழமையிலே அமாவாசை வருது.

இழுத்துட்டுக் கிடக்கிற உசிரை எல்லாம் அடிச்சிட்டுப் போறதுக்குத்தான் இந்த என்வெள்ளிகிழமை அமாவாசைனு சொல்லுவாங்க..ம்ம்ம் பார்ப்போம்..

கூட்டம் கலைந்தது..

‘ஏ மைனி.. கோனாரு என்ன சொன்னாரு.. ? ‘

அவரு என்னத்தை சொல்லறதுக்கிருக்கு.. இப்ப பத்து நாளா இந்தக் குளுகோஸ் தண்ணியை நாக்கிலைத் தொட்டு வைக்கறதில்தான் அவ உசிரு ஆடிக்கிட்டுகிடக்கு. என்னத்தை நினைச்சுக்கிட்டு கிடக்காளோ அவ மவளும் மருமவனும்வந்து காத்துக்கிடக்காவா.. ‘

‘என்ன தம்பி.. நீங்கதான் மூவடையா மருமகனா.. ? ‘

ஆமாய்யா..

இல்லஏ ஒன்னுமில்லே.. மூவடையா எங்கிட்டே ஒரு சீட்டுப் போட்டா பாருங்க..

ரண்டாவது சீட்டு எடுத்திட்டா.. இன்னும் 13 சீட்டு பாக்கி இருக்கு..

மாசமாசம் 250 ரூபா.. பணவிசயம் எதுக்கும் அவ உயிருடனிருக்கும்போதே சொல்லிட்டா நல்லதுனுதான்… ‘

மூவடையா இவர்கள் சொல்கின்ற பணக்கணக்கு , சீட்டு நாட்டு கணக்கை எல்லாம் கேட்டிட்டிருக்க மாதிரி அவர் சொன்னார். அவர்மட்டுமல்ல.. இரண்டு மூன்று பேர் இப்படி அவனிடம் மட்டும் கணக்கு சொல்லியிருக்கின்றார்கள். அவனும் எல்லோரிடமும் சொல்வதுபோல் இவரிடமும் பதில் சொன்னான்.

‘அதனால் என்னய்யா.. நானு மாசமாசம் உங்க பேருக்கு மணியார்டர் பண்ணிடறேன்

மாமியார் ரொம்ப சமாளிப்புள்ளவள் என்ரு அவன் கேள்விப்பட்டிருக்கின்றான்.

அவர்கள் மாச மாசம் அனுப்புகின்ற 100 ரூபாயில் இதை எல்லாம் செய்ய முடியாது.

இதெல்லாம் அவள் எப்படியும் சமாளிச்சிடலாங்கிற துணிச்சலில் செய்திருக்கும் காரியங்கள்.

எதற்குமே எழுத்து கணக்கு கிடையாது..கேட்கவும் முடியாது. நம்பித்தான் ஆகவேண்டும்.

மூவடையாவுக்கு அவர்கள் ஊர் அம்மனின் பெயர் என்று அவர்களின் சின்னம்மா சொல்லியிருக்கின்றாள்.

‘மூன்று யுகம் கொண்டாள் ‘ அவர்கள் ஊர் அம்மனின் திருநாமம்.

அந்த அம்மனின் பெயர்தான் இவளிடம் வந்து மூவடையாளாக மூக்கு வடித்துக்கொண்டு நின்றது.

மூவடையாவுக்கு ரஞ்சிதம் ஒரே பெண்தான். அதுவும் அவள் வெள்ளி செவ்வாய் தவறாது

ஊர் அம்மனுக்கு விரதமிருந்து ரஞ்சிதத்தை உண்டானாள். ரஞ்சிதம் பிறந்தவுடன்

மூன்று யுகம் கொண்டாளுக்கு தனியாக ஆடுவெட்டி கொடை விட்டுக் கொடுத்தாள்.

தனக்கு குழந்தை இல்லை என்பதை விட அம்மனின் பெயர் வைத்த தன்னை யாரும் மலடி என்று சொல்லிவிட்டால் அது அம்மனுக்கே இழுக்கு என்று எண்ணிஅழுதிருக்கின்றாள்.

அம்மா தாயே.. உன் பேரைச் சொல்லி என்னை யாரும் மலடினு சொல்லலாமா ?

நீ அதுக்கு இடம் கொடுக்கலாமா ? ‘ தினமும் அம்மனிடம் இப்படித்தான்பேசிக் கொண்டிருப்பாள்.

அவள் விரதங்களும் நம்பிக்கையும்தான் அவளுக்கு ரஞ்சிதத்தைத் தந்ததாக அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

எந்த நல்லக் காரியத்திற்கும் அம்மனிடம் தான் ஓடுவாள். எல்லா முடிவும் அம்மன் முன்னால் பூ போட்டுப் பார்த்துதான் முடிவுச் செய்வாள்.

ஒரு வெள்ளைப் பூவையும் சிவந்தி, கேந்தி, பூவரசம் என்று எதாவது கலர் பூவையும் சேர்த்து வைத்து விளக்கு ஏற்ற வரும் பூசாரியை எடுக்கச் சொல்லுவாள்.

அவர் வரும் நேரத்தைத் தவற விட்டால் அங்கே வேப்ப மரத்தடியில் விளையாண்டு கொண்டிருக்கும் சின்னப் பிள்ளைகளை பூ எடுத்து தரச் சொல்லுவாள்.

அவள் நினைத்த மாதிரி பூ வந்துவிட்டால்.. அன்று அவள் துட்டுப் பையில் சில்லறைப் புழங்கினால் அடித்தது யோகம் அந்தப் பிள்ளைகளுக்கு,

கடலை மிட்டாய் வாங்கிச் சாப்பிட பைசாக் கொடுப்பாள்.,

ரஞ்சிதத்தை இந்த உறவில்லாத பையனுக்கு கொடுக்க ரொம்பவும் தயங்கினாள்.

எல்லோரும் சொன்னார்கள். சொந்தத்தில் கொடுத்தால் தானே நாளை உன்னை அக்கறையாகக் கவனித்துக் கொள்வான் என்று. அவர்கள் சொல்வதும் சரியாகப்பட்டது.

ஆனால் இந்தப் பையனுக்கு நல்ல வேலை என்று வடக்குத் தெரு வாத்தியாரப்பா சொன்னதும் யோசிக்க வைத்தது.

பூ கட்டிப் போட்டுப் பார்த்தாள். அம்மன் ‘சரி ‘ நு உத்தரவு கொடுத்தவுடன் துணிந்து திருமணம் செய்து கொடுத்தாள்..

அவள் வளர்ப்பில் ரஞ்சிதத்திற்கும் ஊர் அம்மனின் மேல் எப்போதும் தனியானப் பக்தி உண்டு, பரீட்சைக்கு போகும்போது அவள் படிக்காத கேள்வி வரக்கூடாது என்று அம்மனிடம் வேண்டிக்கொள்வாள். வரவில்லை என்றால் ‘அம்மனே.எல்லாம் உன் அருள்.. ‘ என்று மனசில் உருகிப்போவாள்.

எப்போதாவது அவள் படிக்காதது வந்துவிட்டால் அம்மனைப் பற்றி அவளுக்கு வருத்தப் படவே தோன்றியதில்லை.

ரஞ்சிதம் கை காலைக் கழுவிவிட்டு புடவையை சரி செய்து கொண்டாள்.

தலை முடி சரியாக வராமல் சிக்குப் பிடிக்கத் துவங்கிவிட்டது.

அப்படியே எடுத்து ஒரு கொண்டையாக போட்டுக் கொண்டாள்.

நேராக அம்மன் கோவிலுக்குப் போனாள்.

அம்மனிடம் போகவேண்டும் என்றுதான் தோன்றியதே தவிர அதற்கு மேல் அம்மனிடம் என்ன கேட்பது என்று தெரியவில்லை. எல்லாம் அறிந்தவள்தானே

நானும் என் சுயநலமும் என்ன வேண்டி அவள் முன்னால் வந்திருக்கின்றோம் என்பதை அவளுக்குச் சொன்னால் தான் புரியுமா.. என்ன ?

அவள் மெளனமாக கோவில் பண்டாரம் பூசை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அம்மாவுக்கு உடல் நலமில்லாமல் ஆகும்போதெல்லாம் எத்தனைத்தடவைஇதே அம்மனிடம் ஓடிவந்து ‘சாமி என் அம்மாவைக் காப்பாத்து ‘ என்று கண்ணீர் விட்டிருக்கின்றாள்.

திருமணமாகி ஒரு வருடத்திற்குள் இப்படித்தான் அம்மா நெல் காய வைத்துவிட்டு ஏணியிலிருந்து இறங்கும்போது கீழே விழுந்துவிட்டாள். டிரெயின் பிடித்துவந்து மறுநாள் ஊரிலிறங்கி அம்மாவைப் பார்க்கும்வரை எத்தனை வேண்டுதல்கள்..

இதுவரை அவள் அம்மாவுக்காக வேண்டியதிலிருந்து இன்றைய வேண்டுதல் எவ்வளவு வித்தியாசமானது.. அதனால் தான் அவள் வார்த்தைகள் வராமல் ஊமையைப் போல .. மனசில் நினைப்பது சொல்லாகப் பிறக்கும் முன்பே

அவள் மெளனத்தில் கருக்கலைப்பு செய்து கொண்டு .. வாழ்க்கையின்யதார்த்தப் படுக்கையில் மனக் கண்மூடி நின்றாள்.

கோனார் சொன்ன வெள்ளிக்கிழமை அமாவாசை வந்துவிட்டுப் போய்விட்டது.

ரஞ்சிதத்தின் கணவன் பொறுமை இழக்க ஆரம்பித்துவிட்டான்.

‘ரஞ்சிதம்.. மூத்தவனுக்கு இது பத்தாம் கிளாஸ்.. இன்னும் பத்து நாளையிலே பிரி லியம் டெஸ்ட்.. ‘

அவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவள் கணவன் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே பட்டது.

கோனாருக்கு நம்பவே முடியவில்லை.

எப்படி தொண்டைக்குழியில் மட்டும் அவள் உயிர் துடித்துக் கொண்டிருக்கின்றது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.வாத்தியாரப்பா வந்து பார்த்தார்.

‘ஏ மூவடையா.. என்னத்தை நினைச்சுக்கிட்டு இப்படி பிள்ளையைக் காக்கப் போடுதே தாயி..ரஞ்சிதம் இன்னிக்கு சாயந்திரம் அம்மன் கோவில்பண்டாரத்திட்டே போயி திருநீறு வாங்கி நீ கொடுக்கிற குளுகோஸ் தண்ணியிலே கரைச்சுக் கொடு.. ஆங்ங்..அப்படியே மறக்காம நம்ம நாத்தங்காலுக்குப் போயிமண் எடுத்து கிணத்து தண்ணி.. கீழே கொஞ்சமா கிடக்கு.. அதையும் நம்மகோனாரு கிட்டச் சொல்லி எடுத்து தரச்சொல்லு.. கிணத்து தண்ணிலே அவ நாத்தங்காலு மண்ணைப்போட்டு கலக்கி வாயிலே ஊத்து தாயி..

உங்க அம்ம எப்பவும் துட்டுப் பையிலே துட்டு இல்லாம இருக்கவே மாட்டா..

அவ துட்டுப் பையிலே கொஞ்சம் பைசாவைப் போட்டு அவக் கிட்டேசொல்லு தாயி.. ஏம்மா, உன் துட்டுப் பையிலே பைசா இருக்குனு.. ‘

அவர் சொன்ன எல்லாவற்றுக்கும் ரஞ்சிதம் தலை அசைத்தாள்.

அவர் போனவுடம் வாத்தியாரப்பாவின் மனைவி வந்தாள்.

‘ஏ ரஞ்சிதம்.. இங்க பாரு.. இப்படி கயித்துக் கட்டிலிலே மெத்தையிலே

போட்டா அவ இழுத்துக் கிட்டு கிடந்துதான் அவஸ்தைப் படுவா.. ஆமா சொல்லிப்புட்டேன். அவளை எடுத்து நடு வீட்டிலே தரையிலே கிடத்து தாயி.. அவகட்டின வீட்டிலே அவ நல்ல உருண்டு பிரளட்டும்.. ‘

சொன்னது மட்டுமல்ல… யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல் அவளே எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.

அவள் போகும்போது ரஞ்சிதத்தை தனியாகக் கூப்பிட்டு பேசினாள்.

ரஞ்சிதம் கண்களில் கண்ணீர் வழிந்தது..

‘ஏ ரஞ்சிதம் இப்படி நீ அழுதேனா.. அப்புறம் இருக்க வேண்டியதுதான்..எத்தனை நாளு தாயி இப்படிக் காத்துக் கிடக்கப்போறே.. ? ‘

அன்று முழுவது ரஞ்சிதத்திற்கு தூக்கமே வரவில்லை…

கூரையில் கோழி கூவியச் சத்தம்.. எழுந்து வந்து அப்படியே கயித்துக் கட்டிலில் அம்மாவைத் தூக்கிப் படுக்க வைத்தாள்..நைந்துப்போன பழந்துணி மாதிரி அவள் இவள் கைகளில்..

அவள் தலையில் குளிரக் குளிர நல்லெண்ணெய் வைத்தாள்.அப்படியே கட்டிலை நகற்றி வைத்துக்கொண்டு ராத்திரிப் பிடித்து வைத்திருந்த சிமிண்ட் தொட்டி தண்ணியைக் குடம் குடமாக அவள் தலையில் கொட்டினாள்.

நல்ல அம்மாவின் உடம்பை தண்ணீர்விட்டுக் கழுவினாள்.

அம்மாவின் உடலைப் பார்க்கும்போது தன் உடலைத் தானே பார்ப்பது போல் பிரமை. அவள் கைகள் நடுங்கியது. கால்களைத் தொடைப்பக்கத்தை..மார்பை

நடுங்கியத் தன் கைகளால் துடைத்துவிட்டாள்.. முகத்தை அழுத்தி துடைக்கும்போதுஅம்மா கண்திறந்து இவளைப் பார்த்தது போலிருந்தது.

‘அம்மா…அம்மா ‘ அவள் குரல் உடைந்து அந்த இருட்டில் அவளுக்கே அந்நியமாகக் கேட்டது.

அம்மாவை கட்டிலுடன் நகர்த்திக் கொண்டுவந்து நடுவீட்டில் தரையில் கிழிந்தப்பாயில் கிடத்தியப்போது அம்மா இவளுடைய புடவையின் முந்தானையைப்பிடித்திருப்பது தெரிந்தது, எப்போது என் புடவையின் முந்தானையைப் பிடித்தாள்.. அவள் .. அவள் கைகளை எடுக்க முடியாமல் அப்படியேஉட்கார்ந்திருந்தாள்..

அம்மாவும் அவளுமாய். அவள் சேலையில் முந்தானி விரிப்பில் படுத்திருந்த இடம்..

அவள் சின்னவளாக இருக்கும்போதே இறந்துப்போன அப்பாவைப் பற்றிஅவரின் வீர பிரதாபங்களைப் பற்றி அவள் கதை கதையாகச் சொன்னதற்குச் சாட்சியாக நிற்கும் நடுவீட்டின் சுவர்கள் ..

அவர் வண்டி அடிச்சிட்டு வந்தார்னா ஊருக்குள்ளே நுழையும் போதே எனக்குத்தெரிஞ்சிடும்.. அவரு கையாலே காளை மாடுக ரண்டும் அப்படி ஒரு குதியாட்டம்

போட்டுக்கிட்டு ‘ஜல் ஜல் ‘னு வரும்..

காலையில் குளித்தவுடன் அப்படியே செவ்விள நீரை (தேங்காய்) உடைத்துதண்ணீரைக் கொடுத்தாள். குளுகோஸ் தண்ணீருக்கெல்லாம் கைகளால் தட்டிவிடும் அம்மா மடக் மடக்கென செவ்விளநீரைக் குடிப்பதைப் பார்த்து ஓவென அழவேண்டும் போலிருந்தது. அழுகையை அடக்கிக் கொண்டாள்..

இரண்டு நாட்கள்… இது தொடர்ந்தது…

மூன்றாவது நாள்… மூவடையாளின் மூச்சு அடங்கியது…

‘அம்மாஆஆஆஆ

என்னப் பெத்த அம்மாஆஆஆஆ என்னை விட்டுட்டுப் போயிட்டியே

அம்மாஆஆஆஆ ‘ ரஞ்சிதத்தின் அடிமனசிலிருந்து கதறலுடன் வெளிப்பட்ட அழுகையின் குரல் அம்மன் கோவிலில் இருந்த மூன்று யுகம் கொண்டாள் செவிகளிலும் விழுந்தது..


மீள்பதிவு. ஏப்ரல் 2004 ல் எழுதிய கதை.மின்சாரவண்டிகள் தொகுப்பிலிருந்து.




Saturday, July 12, 2025

வேள்பாரி ரஜனி கலாட்டா

 வேள்பாரி ரஜனி கலாட்டா.😃



வேள்பாரி ஒரு கதையாடல் மட்டுமல்ல.

அதன் இலக்கிய அடையாளம் என்பது கதைகள் தாண்டிய வடிவம்/உருவம்தான்.

இதை ஒரு படைப்பின் கதை கூறு & இழைபொருள் 

Fabula & Narration என்பர்.

கதையை யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம்.

அதற்கு எந்த ஒரு திறமையும் இலக்கிய பிரக்ஞையும் தேவையில்லை!

ஆனால் இலக்கிய வடிவத்தில் இழை பொருள் முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த இழை பொருள் இலக்கிய வாசிப்பில் ஒரு மாய சக்தி. ஓவ்வொரு பிரதியும் வாசகவெளியில் பல நூறு பிரதிகளாக மாறும் வித்தையை செய்வதும் அதுதான்.


 அதுதான் கதை சொல்லியிலிருந்து ஒரு இலக்கியப் படைப்பை வேறுபடுத்திக் காட்டும் இடம். சினிமா என்ற காட்சி ஊடகம் தோல்வி அடையும் இடம் இந்தப் புள்ளி தான்.


தி.ஜானகிராமனின் மோகமுள் வாசகப் பிரதியை ஊடகப் பிரதியாக்குவதில் தோல்வி அடைந்தது இதனால்தான்.

வேள்பாரி?????


நிச்சயமாக வேள்பாரிக்கும் இந்தச் சிக்கல் ஏற்படும்.

பொதுஜன காட்சி ஊடகம், மக்களை குஷிப் படுத்தும் வியாபார சந்தையை நோக்கமாக கொண்ட திரையுலகம் இதைக் கையாளுவதில் சில மசாலா ஃபார்முலாக்களை வைத்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் போல பிரபலங்களைக் கொண்டு பிரமாண்டமான காட்சிகளைக் கொடுப்பது.

பார்வையாளனுக்கு தீனிப்போடும் உடை பின்னணி அலங்கார பிரமாண்ட காட்சி அமைப்புகளைக் கொண்டுவருவது.

இரண்டரை மணிநேரம் இந்த பிரமாண்டம்  போதுமென பார்ப்பவரை வாய்பிளிந்து உட்கார வைப்பது..

அந்தப் படம் ஓடிடி க்கு வரும்வரை அதில் நடித்த பிரபலங்களைக் கொண்டு 

24x7 அதைப் பற்றியே எட்டு கோடி தமிழர்களையும் பார்க்க வைக்கும் ஒரு வகையான அராஜகம்...செய்வது!

இதைப் பற்றி எழுதாவிட்டால் சமூக இலக்கிய கலை உலக குற்றமாகிவிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு சமூக வலைத்தளங்கள் எங்கும் நீக்கமற நடக்கும் ஆக்கிரமிப்பு...

இதில் இலக்கியம் தொலைந்துப்போகும்!


ஆனாலும் சில நல்ல விஷயங்கள் நடக்கலாம்.

எதிர்காலத்தில் வேள்பாரியின் கதைச் சுருக்கம் புத்தக வடிவம் பெறும். அது ஆங்கிலத்திலும் மொழியாக்கம் பெறும். 

வேள்பாரி கதை மாந்தர்கள் அதாவது சினிமாவில் காட்டப்படும் கதை மாந்தர்களைத் தேடி விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரே சிலர் வேள்பாரியை முழுமையாக வாசிக்கலாம்.


தொடர்ந்து கடந்த கால பெருமிதங்களை மட்டுமே திரையுலகம் இலக்கியத்தில் இருந்து எடுத்துக் கொள்வதால் ஒரு ம_ _ அளவு கூட நம் பண்பாட்டு அரசியலில் அசைவைக் கொண்டு வர முடியாது.

வேள்பாரி தோழர் வெங்கடேசன் அறியாததா என்ன?

வாழ்த்துகள் தோழர்.

ஒரு பிரமாண்டமான வேள்பாரியை ஓடிடியில் பார்க்கும் நாளுக்காக நானும்.


#வேள்பாரி

#நாவல்சினிமா

#LiteratureCinema

#புதியமாதவி_13072025

Wednesday, June 18, 2025

கவிதையாகவே வாழ்ந்த தம்பதியர்


 கவிதையாகவே வாழ்ந்த தம்பதியர்.

மரணப்படுக்கையிலும் அவள் கவிதை வாசித்தாள்.அவன் புன்னகைத்தான்..!

இது எதோ கற்பனை அல்ல.

அவள் வாழ்வின் தருணங்கள்.

❤️❤️❤️


17 வயதில் அவரைத் திருமணம் செய்து கொண்டேன். அது இளமைக்கால காதலா என்றால் அக்காலத்தில் என்னை விரட்டி விரட்டி காதலித்தவர்கள் பலருண்டு. ஆனால் நான் இவரைத்தான் காதலித்தேன். இவர் கவிதைகள் ஒரு காரணம் என்றால் இவர் ஒரு மார்க்சிஸ்ட் என்பதும் இன்னொரு காரணம்.

மார்க்சிஸ்ட் கவிஞர்கள் நல்ல மனிதர்கள் என்ற நம்பிக்கை என் தந்தையின் வழியாக எனக்கு ஏற்பட்டது. என் பெற்றோர்கள் மார்க்சிஸ்டுகள்!

அவர் நல்ல மனிதர்தான். ஆனால் என் நடுத்தர வர்க்க

மதிப்பீடுகள் அவருடைய கட்டுப்பாடற்ற வாழ்க்கைமுறையுடன்

 எப்போதும் மோதிக் கொண்டே இருந்தது.

நாங்கள் இருவரும் எங்கள் நிலைப்பாடுகளில் பிடிவாதமாக இருந்தோம்.


அவர் என்னையும் எங்கள் திருமணத்தையும் விரும்பினார். நான் அவரை மட்டும் விரும்பினேன். அவர் திருமண உறவின் பாதுகாப்பையும் விரும்பினேன்.அவருக்கோ உலகம்தான் குடும்பம்.

அவரின் அந்தக் குடும்பத்திலிருந்து யார் எப்போது வந்தாலும் சமைத்துப் போட்டு கவனிப்பது என் கடமையானது. அதற்கான பணம் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை!அதை ஒரு மனைவி எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?

அவர் கையில் எப்போதாவது பணம் வந்தால் அதை இயக்கத்திற்கும் பேரணிகளுக்கும் போராட்டங்களுக்கும் செலவு செய்துவிடுவார்.

இவை ஒருபோதும் எனக்கு திருப்தியாக இல்லை. ஆனாலும் எங்கள் மகன் அசுதோஷுக்காகவும்..  கவிதைகளுக்காகவும் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தோம். 


" நீ இல்லாதபோது எனக்குள் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தோன்றுகிறது. " என்பார் அவர். என் மனம் அதில் நெகிழ்ந்து விடும்.

இன்னும் சொல்லப்போனால் இரவெல்லாம் வால்ட் விட்மண் மற்றும் சதாநந்ந் ரேகே கவிதைகளை ஒருவருக்கொருவர் வாசித்து கேட்டுக் கொண்டிருப்போம்.

சில நேரங்களில் எங்கள் கவிதைகளை நாங்கள் பகிர்ந்துக் கொண்டோம். எங்கள் கவிதைகளின் முதல் வாசகராக நாங்களே இருந்தோம்.


அவர் மருத்துவமனையில் இருந்தப்போது இரவு இரண்டு மணியாக இருந்தாலும் காலை ஆறு மணியாக இருந்தாலும் நான் அவருக்கு கவிதைகள்  வாசிப்பேன். சில சமயங்களில் அவர் புன்னகைப்பார். சில சமயங்களில் அவர் மெளனமாக தலை அசைப்பார்.

💥💥💥💥💥

கவிதையாக வாழ்ந்த அவரும் அவளும்..

அவர் பெயர் நாம்தேவ் தசல். அவள் மல்லிகா அமர்ஷேக்.

#நாம்தேவ்தசல்

#NamdeoDhasal

#MallikaAmarsheikh

#MallikaNamdeo

Saturday, June 14, 2025

தலித் அரசியல்

 


இதை அவ்வளவு எளிதாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை! 

காரணம் திரு. தொல். திருமாவளவன் மீதிருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் மட்டுமல்ல. அதற்கும் அப்பால் நாம் கவனிக்க வேண்டிய அரசியல் இது.


* தலித் அரசியல் / ஒடுக்கப்பட்டோர் தலைமைத்துவம் என்பது தனித்துவமானது. அது எல்லாவகையிலும் சமத்துவம் மற்றும் சம உரிமைக்கான அரசியல்.


*அப்படியான அரசியலை முன்னெடுத்து செல்லும் கட்சியும் அதன் தலைவரும் ஒரு முதலாளித்துவ அரசியல் செயல்பாடுகளை நகல் எடுப்பதும் நிலவுடைமை அதிகார பிம்பத்தை ' போல செய்வதும்' ( copy) கவலை அளிக்கிறது.


*தங்களின் அடிப்படை கோட்பாடுகளை இலட்சியங்களை மறந்து ' மேனிலை ஆக்கத்தின்' உத்திகளை உள்வாங்கும் செயல்பாடுகள் தலித்திய அரசியலை நீர்த்துப் போக செய்துவிடும்.


*தலித் அரசியல் மட்டுமல்ல, ஜனநாயக தேசத்தில் எந்த அரசியல் கட்சியோ அதன் தலைவர்களோ கூட எதைச் செய்யக்கூடாது என்று இன்றைய ஜனநாயக பொதுச்சமூகம் எதிர்பார்க்கிறதோ.. அதை நோக்கிச் செல்வது ஆபத்தானது.


*அதிகார வர்க்க அரசியலைப் போலவே நாங்களும் செயல்படுவோம் என்றால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு?!!


We are different.

We are unique.

We prove that in our ever step.

#தலித்அரசியல்

#dalithpolitics

#விசிக

#தொல்திருமாவளவன்